

வெளிநாடுகளில் வேலை செய்து நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுடன் பலரும் குடும்பத்துடன் குடியேறி வருகின்றனர். ஆனால், அங்கு எதிர்பாராத விதமாக நடைபெறும் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் சில நேரங்களில் குடும்பங்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகின்றன. அந்த வகையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்றுள்ள இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தெற்காசியாவைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் சர்ரே (Surrey) பகுதியில் உள்ள வால்மார்ட் கடைக்கு வெளியே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில், 23 வயது இளைஞரும் அவரது 24 வயது காதலியும் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இருவரும் டெல்டா பகுதியில் வசித்து வந்த தெற்காசியப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இரவு 10.38 மணியளவில் அங்கு சென்ற மருத்துவப் பணியாளர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் காப்பாற்ற முயன்றனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. அங்கு அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகியுள்ளார் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது வீட்டிலிருந்து வெளியேறியபோது, இப்படியொரு சம்பவம் நிகழும் என்று குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை. இந்தச் செய்தி அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இளைஞரின் தந்தை கல்கரி நகரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது மகன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அவருக்குக் கிடைத்துள்ளது. மகனை இழந்த துயரத்தில் அவர் நிலைகுலைந்து போயுள்ளார். உயிரிழந்த பெண் தனது மகனின் காதலி என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் மூத்தவராக இருந்த மகனை இழந்தது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவரின் பெயர்களையும் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்தத் துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடைபெற்றதா அல்லது குறிப்பிட்ட நபர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் இந்தச் சம்பவத்திற்குத் தொடர்பு இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
வழக்கை விசாரித்து வரும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் செர்ஜென்ட் ஃப்ரெடா ஃபோங் கூறுகையில், உயிரிழந்த ஆண் ஏற்கெனவே ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி தொடர்பான சில குற்றச் சம்பவங்களில் காவல்துறையின் கவனத்திற்கு வந்தவர் என்று தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற விதம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் பின்னணியைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும், இது கும்பல் மோதல் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற 13 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு இடத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவமும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரவு 10.51 மணியளவில் பிரின்சஸ் டிரைவ் பகுதியில் கார் எரிவதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற அதிகாரிகள் வெள்ளை நிற செடான் காரைக் கண்டுபிடித்தனர். இந்தக் கார் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று விசாரணைக் குழுவினர் கருதுகின்றனர். துப்பாக்கிச்சூட்டுக்கும் கார் தீப்பிடித்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்த சிவப்பு நிற ஃபோர்டு மஸ்டாங் காரையும் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்தக் கார் உயிரிழந்தவர்களில் ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் டாஷ் கேமரா பதிவுகளைச் சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அல்லது சந்தேகத்திற்குரிய வாகனங்களைக் கவனித்தவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக வளாகத்தின் வெளியே இளம் காதல் ஜோடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கனடாவில் வசிக்கும் தெற்காசிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலா, குற்றக் கும்பல்களின் தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் பின்னணியில் உள்ளதா என்பது காவல்துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரியவரும். இளம் வயதிலேயே இரண்டு உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.