கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை... பின்னணி என்ன?

காதலி இறந்த விரக்தியில் காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை... பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்து பிரியா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகன் என்பவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் குறித்து இருவீட்டாருக்கும் தெரியவரவே, திருமணத்துக்கு பெற்றோர் சம்மதித்தனர். அதன்படி இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு வரும் 10-ம் தேதியன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்து பிரியா தற்கொலை செய்து கொண்ட பகுதி
இந்து பிரியா தற்கொலை செய்து கொண்ட பகுதி

பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோயிலில் திருமணம் நடத்தி, குடியாத்தத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் திருமண பத்திரிக்கையை ஊரெங்கும் அளித்து வந்த நிலையில், மணிமேகன் இல்லற வாழ்க்கையில் இணைவதற்கு ஆவலுடன் காத்திருந்தார்.

ஆனால் திருமண வீட்டார் மற்றும் உறவினர்களையே அதிரச் செய்யும் படியாக அசம்பாவித சம்பவம் ஒன்று அரங்கேறியது.

மணிமேகன் - இந்து பிரியாவுக்கு பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது
மணிமேகன் - இந்து பிரியாவுக்கு பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது

ஜூலை 2-ம் தேதியன்று மாலையில் விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற இந்து பிரியா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு மரத்தில் தூக்கில் தொங்கியபடி இந்து பிரியாவின் பிணம் தொங்கியது.

இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர், உறவினர்கள், பிரியாவின் உடலைப் பார்த்து கதறித் துடித்து அழுதனர். மேலும் இந்த தகவல் பிரியாவின் காதலன் மேகனுக்கு தெரியவந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் தனக்கு மனைவியாக வரப்போகிறவள், இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் விரக்தியின் உச்சிக்கே சென்ற மணிமேகன், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக மணிமேகனை மீட்டனர். இதுகுறித்து அறிந்த பரதராமி காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி, பிரியாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல வருடங்களாக காதலித்து வந்த காதல் ஜோடி, திருமண வாழ்க்கையில் இணைவதற்குள், இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகமடைய செய்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com