
திருமணத்தை மீறிய உறவு காரணமாக குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை தண்டனையை ரத்து செய்யக்கோரி அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் – அபிராமி தம்பதிக்குத் திருமணமாகி, நான்கு மற்றும் ஆறு வயதில் 2 குழந்தைகள் இருந்தனர். டிக்டாக்கில் பிரபலமான அபிராமிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பிரியாணிக் கடையில் பணியாற்றும் மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
திருமணம் தாண்டிய இந்த உறவுக்குத் தடையாக இருந்த தனது 2 குழந்தைகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பாலில் விஷம் வைத்து, அபிராமி கொலை செய்தார். பின்னர், மீனாட்சி சுந்தரத்துடன், கேரளா தப்பிச் செல்ல முயன்றபோது, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் குற்றவாளிகள் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள், எம்.எஸ்.ரமேஷ், மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.