“முதல் மனைவியை கொலை செய்துவிட்டு களி திங்க முடியாது” - பருத்திவீரன் சித்தப்பு வாழ்க்கையில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

தனக்கும், தனது சொத்துக்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நடிகர் சரவணனே முழு பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்...
saravanan firs wife and saravan with second wife
saravanan firs wife and saravan with second wife
Published on
Updated on
2 min read

நடிகர் கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சரவணன். இதனைத் தொடர்ந்து ‘நாடோடிகள்’, ‘வேலாயுதம்’, ‘சிலம்பாட்டம்’, ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே மேலும் அறியப்பட்டார். தற்போது சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் சரவணன், குடும்ப பிரச்சினை தொடர்பாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது முதல் மனைவி சூர்யாஸ்ரீ, மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை நடிகர் சரவணன் தனது ஆட்கள் மூலம் அகற்றியதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும், தனது சொத்துக்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நடிகர் சரவணனே முழு பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் நடிகர் சரவணன் மற்றொரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மவுலிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நடிகர் சரவணனும் தனது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி மற்றும் 9 வயது மகனுடன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். அப்போது தனது முதல் மனைவி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக கூறி அவர் எதிர் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரவணன், “முதல் மனைவியுடன் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துள்ளேன். எனது இரண்டாவது திருமணத்திற்கு கூட அவரே சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது என்னிடம் இருந்து பணம் பெறும் நோக்கத்தில்தான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவரது உயிருக்கு என்னால் எந்த ஆபத்தும் வராது” என்று தெரிவித்தார்.

மேலும், “எனக்குத்தான் அவர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். ‘முதல் மனைவியை கொலை செய்துவிட்டு களி திங்க முடியாது’ . அமைதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம். 12 ஆண்டுகளாக பேசாமல் இருந்தவர் தற்போது திடீரென புகார் அளிப்பதன் பின்னணியை போலீசார் விசாரிக்க வேண்டும்” என்றும் சரவணன் கூறியுள்ளார். சரவணன் முதல் மனைவி அளித்த புகார் மற்றும் நடிகர் சரவணன் அளித்த எதிர் புகார் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு மவுலிவாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருதரப்பினரிடமும் விளக்கம் பெற்று, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com