
தென்னிந்தியத் திரையுலகில், 1980-களின் தொடக்கத்தில், மலையாளம் மற்றும் தமிழில் மின்னும் நட்சத்திரமாகப் பிரகாசித்தவர் நடிகை ராணி பத்மினி. அழகு, திறமை, மற்றும் துணிச்சலான கதாபாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்த அவர், தனது 24-வது வயதிலேயே கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், 36 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியத் திரையுலகின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக உள்ளது. பணம், பேராசை மற்றும் நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாக அரங்கேறிய இக்கொலை, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த தீவிர கேள்விகளை எழுப்பியது.
சினிமா கனவும், அண்ணா நகர் பங்களாவும்
ராணி பத்மினியின் தாயார் இந்திராவிற்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்திராவால் அடைய முடியாத கனவை தனது மகள் மூலம் அடைய வேண்டும் என்ற ஆர்வமே ராணி பத்மினியை சினிமா உலகிற்கு அழைத்து வந்தது. இந்தித் திரையுலகில் நுழைய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தாயும் மகளும் அதிர்ஷ்டத்தைத் தேடி அப்போதைய மெட்ராஸுக்கு வந்தனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள 18வது அவென்யூவில் ஒரு ஆடம்பரமான பங்களாவை வாடகைக்கு எடுத்த அவர்கள், தங்களுக்கு உதவி செய்ய ஊழியர்களைத் தேடினர். ராணி பத்மினி பத்திரிகையில் கொடுத்த விளம்பரமே அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த துயரத்திற்கான முதல் விதையாக அமைந்தது.
விளம்பரத்தைப் பார்த்து முதலில் ஓட்டுநர் வேலைக்குச் சேர்ந்தவர் ஜாப்ராஜ் என்பவர். சரியாக ஒரு மாதம் கழித்து, கார் திருட்டு வழக்குகளில் ஏற்கெனவே பலமுறை குற்றம் சாட்டப்பட்டிருந்த லட்சுமிநரசிம்மன் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். இந்த ஜாப்ராஜும், லட்சுமிநரசிம்மனும் நண்பர்கள். இவர்களைத் தொடர்ந்து கணேசன் என்பவர் சமையல்காரராகச் சேர்ந்தார். ஒரு நட்சத்திரத்தின் இல்லத்தில் மிக முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்ட இந்த மூவரும்தான், பின்னர் இரக்கமற்ற கொலைச் சதிக்குக் காரணமானார்கள்.
கொலையின் பின்னணி: பேராசையும் துரோகமும்
1981-ல் 'கதையறியாதே' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார் ராணி பத்மினி. பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய 'சங்கர்ஷம்' திரைப்படத்தின் மூலம் அவர் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார். இவரது நட்சத்திர மதிப்பும், வருமானமும் உயர்ந்தபோது, தான் குடியிருந்த வாடகை வீட்டையே சொந்தமாக வாங்க முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, புரோக்கர் பிரசாதை அழைத்த ராணி பத்மினி, வீட்டிற்கான தொகையை ரொக்கமாகச் செலுத்தத் தயார் என உறுதியளித்தார். இந்தச் செய்தி, ஜாப்ராஜின் காதுகளுக்கு எட்டியது. ராணி பத்மினியின் வீட்டில் ஏராளமான பணமும் தங்கமும் குவிந்து கிடக்கும் என்று ஊகித்த ஜாப்ராஜ், அதைத் திருடும் நோக்குடன் தாயையும் மகளையும் கொன்று விடத் திட்டமிட்டார். இந்தச் சதித் திட்டத்தில் காவலாளியையும், சமையல்காரரையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இரக்கமற்ற கொலை
அக்டோபர் 15, 1986 அன்று, காலையில் ராணி பத்மினியும் அவரது தாயாரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொலை நடந்த அன்றிரவு, தாயும் மகளும் மது அருந்தியதாகச் சொல்லப்படுகிறது.
நள்ளிரவில், ராணி பத்மினி சமையலறைக்குச் சென்றபோது, ஜாப்ராஜ் பதுங்கியிருந்து இந்திராவை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இந்திராவின் உடலில் பத்துக்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்தன. தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ராணி பத்மினி, ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் தாயைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
அவர் தப்பிக்க முயன்றபோது, மூன்று கொலையாளிகளும் சேர்ந்து ராணி பத்மினியைப் பிடித்து, அவரது மார்பில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இரக்கமின்றி கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இக்கொடூரச் சம்பவம் நள்ளிரவில் அரங்கேறியதால், அக்கம் பக்கத்தினருக்கோ, வெளியில் உள்ளவர்களுக்கோ தெரிய வரவில்லை.
கொலை நடந்த சில நாட்கள் கழித்து, வீட்டு விஷயமாக ராணி பத்மினியைச் சந்திக்க புரோக்கர் பிரசாதம் வீட்டிற்கு வந்தார். கதவைத் தட்டியபோது யாரும் திறக்காததால் திரும்பிச் செல்ல முயன்றபோது, பங்களாவில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்தார். காவல் துறையின் சோதனையில், அழுகிய நிலையில் இரண்டு சடலங்களும் குளியலறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் சிதைந்திருந்ததால், குளியலறையிலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சடலங்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவை காரின் டிக்கியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. யாரும் உரிமை கோராததால், சடலங்கள் மெட்ராஸ் திரைப்பட பரிஷத் மூலம் அடக்கம் செய்யப்பட்டன.
கொலைக்குப் பின் ராணி பத்மினிக்குச் சொந்தமான சுமார் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் காணாமல் போனது. இந்தக் கார் காணாமல் போனதுதான் காவல்துறையின் கவனத்தை ஓட்டுநரான ஜாப்ராஜ் மீது திருப்பியது. தீவிர தேடுதலுக்குப் பிறகு, ஜாப்ராஜ், லட்சுமிநரசிம்மன் மற்றும் கணேசன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி மூவருக்கும் மரண தண்டனை விதித்தார். எனினும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, மூவரின் தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நீண்ட காலம் சிறையில் இருந்த லட்சுமிநரசிம்மன், 2017 ஆம் ஆண்டு, அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். ஜாப்ராஜ் சிறையிலேயே உயிரிழந்தார். கணேசன் சிறையில் இருந்து தப்பிவிட்டதாக சில தமிழ்ப் பத்திரிகைகள் அப்போது செய்தி வெளியிட்டன.
இளம் நடிகை ராணி பத்மினியின் இந்த அதிர்ச்சியூட்டும் கொலை, தென்னிந்தியத் திரையுலகில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. புகழ், செல்வம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து இச்சம்பவம் எழுப்பிய கேள்விகள் இன்றும் சினிமா பிரபலங்களின் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.