திருமண பரிசாக சென்ற "வெடிகுண்டு".. ஒரு ஆங்கில Professor-ன் "பழிவாங்கல்" சம்பவம் - 7 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு!

“திருமண பரிசு”னு நினைச்சு, சாஹு அந்த பார்சலை திறந்தார். ஆனா, உள்ளே இருந்தது...
meher case- accused get life senetnced
meher case- accused get life senetnced
Published on
Updated on
2 min read

2018-ல் ஒடிசாவின் பட்நாகர் நகரில் நடந்த ஒரு பயங்கர சம்பவம், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைச்சது. ஒரு திருமண பரிசு என்று நினைச்சு திறந்த பார்சலில் இருந்த வெடிகுண்டு, மணமகனையும், அவரோட பாட்டியையும் கொன்று, மணப்பெண்ணை படுகாயப்படுத்தியது. இந்தியாவில் இப்படி ஒரு பார்சல் வெடிகுண்டு வழக்கு முதல் முறையாக பதிவானது. 

என்ன நடந்தது? சம்பவத்தோட தொடக்கம்

2018 பிப்ரவரி 23-ம் தேதி, ஒடிசாவின் பொலநகீர் மாவட்டத்துல இருக்குற பட்நாகர் நகரில் வசித்து வந்தவர் சௌம்யா சேகர் சாஹு (26) எனும் மென்பொருள் பொறியாளர், தன்னோட புது மனைவி ரீமா ராணி சாஹுவோடு, திருமணமாகி வெறும் ஐந்து நாள்தான் ஆச்சு. அந்த நேரத்துல, அவங்க வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. “திருமண பரிசு”னு நினைச்சு, சாஹு அந்த பார்சலை திறந்தார். ஆனா, உள்ளே இருந்தது ஒரு வெடிகுண்டு! அது வெடிச்சதும், சாஹுவும், அவரோட 85 வயசு பாட்டி ஜெமாமணி சாஹுவும் அந்த இடத்திலேயே உயிரிழந்தாங்க. ரீமா, உடம்பு முழுக்க 30-35% தீக்காயங்களோடு உயிர் தப்பினாலும், ஒரு மாசத்துக்கு மேல மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது.

இந்த பார்சல், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரத்துல இருந்து, ‘S.K. ஷர்மா’னு ஒரு போலி பேரில், தப்பான முகவரியோடு அனுப்பப்பட்டிருந்தது. முதலில், இது ஒரு விபத்தா, இல்லை தீவிரவாத தாக்குதலானு காவல்துறை குழம்பியது. ஆனா, விசாரணை ஆரம்பிச்சதும், இது ஒரு தனிப்பட்ட பழிவாங்கல் குற்றம்னு தெரிஞ்சது. இந்த பார்சல், சாஹுவோட அம்மா சஞ்சுக்தா சாஹுவுக்கு எதிரான பகைமையால் அனுப்பப்பட்டது. சஞ்சுக்தா, பட்நாகரில் இருக்குற ஜ்யோதி விகாஸ் கல்லூரியோட முதல்வராக இருந்தவர். இந்த குற்றத்துக்கு பின்னால், ஒரு தொழில்முறை பகை இருந்ததுதான் மையமான காரணம்.

விசாரணை: குற்றவாளி யார்?

இந்த சம்பவம், ஒடிசாவை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கியது. முதலில், உள்ளூர் காவல்துறை விசாரணையை ஆரம்பிச்சது. ஆனா, எந்த துப்பும் கிடைக்கலை. ஒரு மாசத்துக்கு பிறகு, மார்ச் 23, 2018-ல், ஒடிசா குற்றப்புலனாய்வு பிரிவு (Crime Branch) இந்த வழக்கை எடுத்துக்கிச்சு. குற்றப்புலனாய்வு பிரிவு தலைவர் அருண் போத்ரா, இந்த வழக்கை மிக தீவிரமா விசாரிச்சார்.

விசாரணையில் சில முக்கியமான தகவல்கள் வெளியே வந்தன:

குற்றவாளி கண்டுபிடிப்பு: ஏப்ரல் 25, 2018-ல், புஞ்சிலால் மெஹர் என்ற ஆங்கில விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார். மெஹர், ஜ்யோதி விகாஸ் கல்லூரியில் வேலை பார்த்தவர். 2014-க்கு முன்னாடி, அவர் அந்த கல்லூரியோட முதல்வராக இருந்தார். ஆனா, சஞ்சுக்தா சாஹு முதல்வராக வந்ததும், மெஹர் தன்னோட பதவியை இழந்தார். இந்த அவமானமும், பகைமையும், அவரை இந்த குற்றத்துக்கு தூண்டியது.

திட்டமிட்ட குற்றம்: மெஹர், இந்த வெடிகுண்டு தாக்குதலை எட்டு மாசமா திட்டமிட்டிருந்தார். தீபாவளி பட்டாசுகளில் இருந்து 2 கிலோ வெடிமருந்து சேகரிச்சு, வெடிகுண்டு தயாரிச்சார். இணையத்துல வெடிகுண்டு செய்யறது பத்தி படிச்சு, அதை ஒரு பார்சலில் வச்சு அனுப்பினார்.

தடயங்களை மறைச்சது: மெஹர், தன்னோட அடையாளத்தை மறைக்க ரொம்பவே தந்திரமா நடந்துக்கிட்டார். ராய்ப்பூரில் CCTV கேமரா இல்லாத ஒரு கூரியர் கடையை தேர்ந்தெடுத்து, ஆட்டோ ஓட்டுநரை வச்சு பார்சலை அனுப்பினார். தன்னோட செல்ஃபோனை வீட்டுல வச்சுட்டு, ஆதாரங்களை அழிக்க முயற்சி செஞ்சார். ‘S.K. சின்ஹா’னு ஒரு போலி பேரில் காவல்துறைக்கு கடிதம் எழுதி, விசாரணையை திசை திருப்ப முயற்சிச்சார்.

முக்கிய ஆதாரங்கள்: காவல்துறை, மெஹரோட வீட்டில் கூரியர் ரசீதை கண்டுபிடிச்சது. மேலும், ஒரு வீடியோவில், மெஹர் வெடிகுண்டு தயாரிக்கறது பதிவாகி இருந்தது, இது வழக்கில் முக்கிய ஆதாரமா அமைஞ்சது.

ஆகஸ்ட் 2018-ல், 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மெஹருக்கு எதிரா இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செஞ்சாங்க.

இந்த வழக்கு, பொலநகீரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிபதி (ADJ) நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஆனா, விசாரணை ரொம்ப மெதுவா நகர்ந்தது. 60 சாட்சிகளோட வாக்குமூலங்கள் பதிவு செஞ்சாலும், பல தடைகள் வந்தன:

தாமதங்கள்: வழக்கு தொடங்குவதற்கே நிறைய நேரம் ஆச்சு. 2020-ல், ஒடிசா உயர்நீதிமன்றம், விசாரணையை வேகப்படுத்த சொன்னது. 2025 ஜனவரியில், உச்சநீதிமன்றம், “ஒரு மாசத்துக்குள்ள விசாரணையை முடிங்க”னு உத்தரவு போட்டது. 2019-ல், மெஹர், பட்நாகர் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செஞ்சு, காவலர்களை தாக்கினார். இதனால, அவருக்கு எதிரா இன்னொரு வழக்கு பதிவு ஆச்சு. மேலும், சிறையில் இருந்து பத்திரிகையாளர் படிப்பு படிக்க முயற்சிச்சு, தன்னோட குற்றவாளி இமேஜை மாத்த பார்த்தார்.

இந்த வழக்கு, ‘மைண்ட்கேம்’னு ஒரு திரைப்படமா எடுக்கப்பட்டபோது, மெஹரோட மனைவி சௌதாமினி, “இது எங்க குடும்பத்துக்கு அவமானம்”னு சொல்லி, மும்பை உயர்நீதிமன்றத்தில் படத்துக்கு தடை கேட்டார். ஆனா, படம் வெளியாகிடுச்சு. 2025 மார்ச் 6-ல், மெஹர் தன்னோட இறுதி வாக்குமூலத்தை கொடுத்தார். ஏப்ரல் 3-ல், உடல் ஆதாரங்கள் (physical evidence) தொடர்பான விசாரணை முடிஞ்சது. இந்நிலையில் நேற்று (மே 28) நீதிபதி சோனாலி பட்நாயக், மெஹருக்கு ஆயுள் தண்டனையும், ₹50,000 அபராதமும் விதிச்சு தீர்ப்பளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com