

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், மகன் சண்முகம் என்கிற பாலா (21). இவர் கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தவர் மீண்டும் வேலைக்கு திரும்பிச்செல்லவில்லை. வீட்டிலேயே தான் இருந்துள்ளார். தாய், தந்தையை இழந்த பாலா தனது சித்தப்பா மற்றும் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள நாடக மேடையில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்து உள்ளார் பாலா. அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் பாலா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிறிது நேரத்தில் பாலா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உறவினர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த லாலாப்பேட்டை போலீசார் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞரை லாலாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இறந்தாரா? அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.