

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தன்னுடன் வாழ விரும்பாத மனைவியை அவரது முன்னாள் காதலருடன் சேர்த்து வைத்து, கணவனே திருமணம் செய்து வைத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஒரு வருடமாக PRD ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் தனது முன்னாள் காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி ஹர்தோய் சென்றுள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் காவல்துறையில் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பெண்ணின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவரது முன்னாள் காதலருடன் அவரை மீட்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் அழைத்து வந்த போலீசார், அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, அந்தப் பெண் தனது கணவருடன் தொடர்ந்து வாழ விரும்பவில்லை என்றும், தனது முன்னாள் காதலருடனேயே வாழ விரும்புவதாகவும் குடும்பத்தினரிடமும் காவல்துறையினரிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்தப் பெண்ணும் அவரது முன்னாள் காதலரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும், திருமணத்திற்கு முன்பே இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக அந்தப் பெண் PRD வீரரை திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்குப் பிறகும் தனது முன்னாள் காதலருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மனைவியை தன்னுடன் வாழுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம் என முடிவு செய்த கணவர், அவரது விருப்பத்திற்கு மதிப்பளிக்க சம்மதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரின் சம்மதத்துடன், உள்ளூர் கோயிலில் அந்தப் பெண்ணுக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, புனித அக்னியை ஏழு முறை வலம் வந்தனர். திருமணம் முடிந்ததும், அந்த PRD வீரர் தனது மனைவியை அவரது முன்னாள் காதலருடன் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணும் அவரது முன்னாள் காதலரும் மாலிஹாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அவரை முன்னாள் காதலருடன் சேர்த்து வைத்த கணவரின் முடிவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.