
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம், காசியாபாத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதை நிறுத்துமாறு கணவர் கூறியதால், ஆத்திரமடைந்த மனைவி, அவரை கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனிஸ் என்பவர் தனது மனைவி இஷ்ரத் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அனிஸ் அளித்த வாக்குமூலத்தின்படி, அவரது மனைவி இஷ்ரத் வழக்கமாக இன்ஸ்டாகிராமில் ஆபாசமான ரீல்களைப் பதிவிட்டு வந்துள்ளார். இந்த செயல் பிடிக்காத அனிஸ், அதை நிறுத்தச் சொல்லி அடிக்கடி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இஷ்ரத், "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது என் பொழுதுபோக்கு. அதை உன்னால் தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார். அனிஸ் இதைத் தொடர்ந்து எதிர்த்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த இஷ்ரத், சமையலறையிலிருந்து கத்தியை எடுத்து அனிஸைக் குத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை அனிஸ் வீடியோவாக எடுத்து காவல்துறையிடம் ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளார்.
அனிஸ், தன் மனைவியின் இந்த நடத்தைக்கு முன்பு இருந்தே குடும்பத்தில் பிரச்சனை இருந்து வருவதாகக் கூறுகிறார். இஷ்ரத், அடிக்கடி வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், வீட்டு வேலைகளைப் புறக்கணித்ததாகவும் அனிஸ் குற்றம் சாட்டினார். அனிஸ் இதை தட்டிக் கேட்ட போதெல்லாம், இஷ்ரத் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். மேலும், அனிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும் எச்சரித்துள்ளார்.
ஒருமுறை, இஷ்ரத் காவல்துறையை அழைத்து, அனிஸ் மீது பொய்யான புகார் அளிக்க, அனிஸ் சில நாட்கள் சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காசியாபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அனிஸ் அளித்த புகாரின் அடிப்படையிலும், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களின் மோகம், குடும்ப உறவுகளில் எவ்வளவு பெரிய விரிசல்களை ஏற்படுத்துகிறது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இது ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையாகத் தோன்றினாலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகளையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.