அதிமுக மாசெ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; குவிந்த தொண்டர்கள்!

அதிமுக மாசெ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; குவிந்த தொண்டர்கள்!
Published on
Updated on
1 min read

அதிமுக வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து அதிமுக தொண்டர்கள் அவரது இல்லத்தில் குவிந்து வருகின்றனர். 

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. மேலும்,  சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோர் குழுவாக காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ராஜேஷ் இல்லம் முன்பு குவிந்தனர். இதனால் இங்கு 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் திடீரென பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் லேசாக ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர்கள் பலரும் ராஜேஷின் இல்லம் முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர். தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால் அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டு அவர்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், வடை, டீ மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com