“காதலியை கத்தியால் குத்தி கொன்ற காதலன்” - ஒரே நொடியில் முடிந்த 4 ஆண்டு காதல்.. விடுதியில் அறையில் நடந்த தகராறு!

ஆத்திரமடைந்த கோகுல் கிருஷ்ணா, கத்தியை எடுத்து கங்காவைக் குத்தியுள்ளார்...
Bengaluru nursing student murder
Bengaluru nursing student murder
Published on: 
Updated on: 
1 min read

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நீலேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதுடைய கோகுல் கிருஷ்ணா. அதே மாநிலத்தின் அடூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய கங்கா. இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தனர். இதில் கோகுல் கிருஷ்ணா, கங்காவின் சீனியர் என சொல்லப்படுகிறது. இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், சொந்த ஊரை விட்டு பெங்களூருவுக்கு வந்து ஒரே கல்லூரியில் படித்து வந்ததாலும், கல்லூரி காலத்திலேயே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறி கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இருவரும் தங்களது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து, பெங்களூருவிலேயே வேலை தேட முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று(நவ 27) முன்தினம் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த இருவரும், காட்டன்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று காலையில் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறித் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த கோகுல் கிருஷ்ணா, கத்தியை எடுத்து கங்காவைக் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த கங்கா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட விடுதியில் இருந்தவர்கள் உடனடியாக கங்காவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கங்காவைக் கொலை செய்ததாக கோகுல் கிருஷ்ணாவைக் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கோகுல் கிருஷ்ணா மற்றும் கங்கா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததும், வேலை தேடுவதற்காகவே இருவரும் பெங்களூருவுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், கங்காவின் நடத்தையில் கோகுல் கிருஷ்ணாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கங்காவைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கங்காவைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கோகுல் கிருஷ்ணா முன்கூட்டியே கத்தி வாங்கி வந்தாரா அல்லது விடுதி அறையிலேயே கத்தி இருந்ததா என்பது இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்த ஜோடி, வேலை தேடி பெங்களூருவுக்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறு இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.