
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் ஆஷா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்ஸ்ருதின் என்பவருடன் ஆஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். எனவே ஹுலிமாவு என்ற இடத்தில் இருவரும் வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வசித்து வந்துள்ளனர்.
இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் வார இறுதி நாட்களில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் ஆஷா சம்ஸ்ருதின் இடம் “என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்க போற” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சம்ஸ்ருதின் ஆஷாவை சரமாரியாக அடித்துள்ளார் மேலும் வீட்டில் இருந்த கட்டையால் ஆஷாவை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆஷா உயிரிழந்ததை தெரிந்துகொண்ட சம்ஸ்ருதின் அவரது உடலை மறைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி வீட்டில் இருந்து ஒரு மூட்டையில் ஆஷாவின் உடலை போட்டு கட்டியுள்ளார்.
பின்னர் மூட்டையுடன் வெளியில் சென்று ஒரு ஆட்டோவை பிடித்துள்ளார், ஆட்டோ ஓட்டுநர் மூட்டையை குறித்து கேட்டதற்கு வீட்டை சுத்தம் செய்தேன் தேவையில்லாத பொருட்களை எல்லாம் குப்பை தொட்டியில் போட வேண்டும் என் கூறியுள்ளார். இந்நிலையில் சன்னமானகேரி பகுதிக்கு அருகில் நின்றிருந்த ஒரு குப்பை தொட்டியில் ஆஷாவின் உடலை வீசி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் வேலைக்கு வந்த துப்புரவு பணியாளர்கள் குப்பையில் வித்தியாசமான மூட்டை இருப்பதை கவனித்து அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் இருந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குப்பை லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் படி சம்ஸ்ருதினை கைது செய்து விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். குப்பை தொட்டியில் ஒரு பெண் சடலமாக இருந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.