கர்நாடக மாநிலம், பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ. இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படித்தபோது அவருடன் அதே கல்லூரியில் படித்த அபிஷேக் என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அபிஷேக், அந்த நட்பை காதலாக மாற்ற முயன்ற நிலையில், வாணிஸ்ரீ அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். பின்னர் இவர் வேலைக்கு பெங்களூரு சென்று வீடு ஈடுத்து தனியாக வசித்து வந்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து அபிஷேக் அவரை தொல்லை செய்து வந்த நிலையில் வாணிஸ்ரீ இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், வாணிஸ்ரீயின் தனிப்பட்ட புகைப்படங்களை கிராஃபிக் செய்து அவருக்கே அனுப்பி மிரட்டத் தொடங்கியதாக கூறப்படுகிறது. தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என்றும், “நான் சொல்லும் போது என்னுடன் உல்லாசமாக இருக்கணும்” என்றும் இல்லையெனில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவேன் என்றும் மிரட்டியதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மிரட்டல்களுக்கு வாணிஸ்ரீ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இருப்பினும் அபிஷேக்கின் தொடர் தொல்லை மற்றும் மிரட்டல்களால் வாணிஸ்ரீ கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று தனது தங்கைக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அருகில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வாணிஸ்ரீயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிஷேக்கின் தொடர் மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தனது குடும்பத்தின் மீது தனக்கு இருந்த பாசம் குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமானவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வாணிஸ்ரீயை மிரட்டியதாக கூறப்படும் அபிஷேக் மீது போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்