போபாலை உலுக்கிய 17 வயது சிறுவன் கொலை.. உடற்பாகம் மாயம்! ரூ.2 கோடி சர்வதேச கடத்தல் கும்பலா? விசாரணையில் பகீர் திருப்பம்

சிறுவனின் உடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட உடற்பாகம் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது...
Mysterious Death and Organ Trafficking
Mysterious Death and Organ Trafficking
Published on
Updated on
2 min read

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 17 வயது சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த (ஆகஸ்ட் 6) -ஆம் தேதி வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசாரும், உறவினர்களும் சிறுவனை தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், ஐந்து நாட்களுக்குப் பிறகு, (ஆகஸ்ட் 11) ஆம் தேதி அருகிலுள்ள ஏரியில் சிறுவனின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி

முதலில் சாதாரண கொலை வழக்காகக் கருதப்பட்ட இந்தச் சம்பவத்தில், பிரேதப் பரிசோதனையின் போது போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் உடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட உடற்பாகம் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த உடற்பாகம் சர்வதேச சந்தையில் சுமார் ரூ.2 கோடி வரை விலை போகக்கூடும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உண்மையில் உறுப்பு கடத்தல் கும்பலுடன் இந்தக் கொலைக்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

13 பேரிடம் தீவிர விசாரணை

சம்பவத்தின் பின்னணியை கண்டறிய களமிறங்கிய போலீசார், ஒரு சிறுவன் உட்பட சுமார் 13 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், சிறுவனின் உடலில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படும் உடற்பாகம் இதுவரை மீட்கப்படவில்லை. அது எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு 17 வயது சிறுவன் கொடுத்த புகார்

இதற்கிடையே, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு 17 வயது சிறுவனும் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னையும் ஒரு கும்பல் குறிவைத்து, தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக அந்தச் சிறுவன் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இரண்டு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறுவர்களைக் குறிவைத்து செயல்படும் ஒரு பெரிய கும்பல் இதன் பின்னணியில் உள்ளதா, அல்லது இந்தச் சம்பவங்களுக்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். 17 வயது சிறுவனின் மரணம், மாயமான உடற்பாகம், ரூ.2 கோடி கடத்தல் கோணம் மற்றும் மற்றொரு சிறுவனின் பரபரப்பு புகார் என அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் போபால் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. விசாரணை முடிவில் இந்த மர்மத்திற்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com