மாணவி சேர்க்கையை இதற்காக எல்லாம் தடுப்பது சட்டப்படி தவறு - உயர்நீதிமன்றம்

மாணவி சேர்க்கையை இதற்காக எல்லாம் தடுப்பது சட்டப்படி தவறு - உயர்நீதிமன்றம்

பெற்றோர் பிற மாநிலத்தில் ஜாதிச் சான்று பெற்றவர்கள் என்பதற்காக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டில், மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை மறுத்தது சட்டப்படி தவறானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on

நீட் தேர்வில், 720க்கு 506 மதிப்பெண்கள் பெற்ற மஹதி பர்லா என்ற மாணவி தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தார். விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றமும் செய்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு, பிற மாநிலங்களில் பெற்ற ஜாதிச் சான்று இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது என்ற விளக்கக் குறிப்பேடு பிரிவைச் சுட்டிக்காட்டி, மாணவி மஹதியின் தந்தை ஆந்திரா மாநிலத்தில் ஜாதிச் சான்று பெற்றுள்ளதால்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பரிசீலிக்க முடியாது என மறுத்து விட்டது.

இதை எதிர்த்தும், தனக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கக் கோரியும் மஹதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். பிற மாநில ஜாதிச் சான்றிதழ் பரிசீலிக்கப்பட மாட்டாது என்ற பிரிவு, மாணவர் சேர்க்கை கோரும் விண்ணப்பதாரருக்கு தான் பொருந்துமே தவிர அவரது பெற்றோருக்கு அல்ல எனவும், மாணவி தமிழகத்தில் தான் ஜாதிச் சான்று பெற்றுள்ளார் எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி,  பெற்றோர் பிற மாநிலத்தில் ஜாதிச் சான்று பெற்றவர் என்பதற்காக மாணவர் சேர்க்கை மறுப்பது சட்டப்படி தவறானது எனக் கூறி, மனுதாரரை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக கருதி, கலந்தாய்வில் அனுமதிக்கவும், தகுதி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com