
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தர்மத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக கன்னிவாடி காவல் துறையினர் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில் கன்னிவாடி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.
சம்பவம் நடந்த பகுதியில் வழித்தடத்தில் இருக்கும் கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணையை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொல்லப்பட்ட இளம்பெண் மாரியம்மாள் (22) என்றும் இவர் பெற்றோர் யாரும் இல்லாததால் ஆசிரமத்தில் வளர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சாணார்பட்டி, எமக்கல்லாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்ததாகவும், இதனால் இரண்டு முறை கர்ப்பம் அடைந்ததாகவும் அதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாரியம்மாள் பிரவீனை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாரியம்மாளை காதலன் பிரவீன் அமைதிச் சோலை அருகே அழைத்துச் சென்று கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் பிரவினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இளம் பெண் நடுக்காட்டில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்