

ஒரு சிறிய நிலத்தகராறு எத்தகைய கொடூரமான முடிவை ஏற்படுத்தும் என்பதற்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. காவல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறப்பு காவல் அதிகாரி ஒருவர், வழியிலேயே மர்மமான முறையில் காணாமல் போனார். அவரைத் தேடி வந்த காவல்துறையினர், காட்டுப் பகுதியில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை மீட்டனர். விசாரணையில், அவரைக் கொலை செய்ததாக அவரது உறவினரும், உறவினரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்த நிலப்பிரச்சினை மீண்டும் கொலைக்குக் காரணமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள திரிகாம் கிராமத்தைச் சேர்ந்தவர் பஷீர் அகமது (55). இவர் அப்பகுதியில் சிறப்பு காவல் அதிகாரியாக (SPO) பணியாற்றி வந்தார். அக்டோபர் 14ஆம் தேதி மாலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து பணிக்காகக் கிளம்பியுள்ளார். தனது சேவைத் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு, காட்டுப் பகுதியில் அமைந்திருந்த காவல் கண்காணிப்பு மையத்துக்குச் சென்றுள்ளார். அவரது வீட்டுக்கும் பணியிடத்துக்கும் இடையே சுமார் 800 மீட்டர் தூரம்தான் இருந்துள்ளது.
இரவு முழுவதும் பணியில் இருக்கும் அவர், மறுநாள் காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் வீடு திரும்புவது வழக்கம். ஆனால், அக்டோபர் 15ஆம் தேதி காலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி பர்வீனா மற்றும் 15 வயது மகள் தில்ஷாதா ஆகியோர் பதற்றமடைந்தனர். காலை 8.30 மணி ஆகியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், அருகில் வசித்து வந்த உறவினர் குலாம் ரசூலிடம் சென்று விஷயத்தைக் கூறியுள்ளனர்.
இதையடுத்து குடும்பத்தினர் பஷீர் பணியாற்றிய காவல் மையத்துக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் வழக்கமான நேரத்திலேயே அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அங்கிருந்த காவலர்கள் தெரிவித்தனர். ஆனால், வீட்டுக்கும் காவல் மையத்துக்கும் இடையே உள்ள பாதையில் அவரைக் காணவில்லை. அந்த வழி காட்டுப்பகுதி வழியாகச் செல்வதால், வனவிலங்குகள் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. அவர் தனது சேவைத் துப்பாக்கியுடன் காணாமல் போனதால், தீவிரவாதிகள் அவரைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் முதலில் சந்தேகித்தனர். இதையடுத்து காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் ஒரு முக்கியமான தகவல் கிடைத்தது. பஷீரின் செல்போனும் காணாமல் போயிருந்தது. அந்த எண்ணைக் கண்காணித்தபோது, செல்போன் அடிக்கடி அணைக்கப்பட்டும் மீண்டும் இயக்கப்பட்டும் வந்தது தெரியவந்தது. இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, வீட்டுக்கும் பணியிடத்துக்கும் இடையிலான காட்டுப்பகுதியில் மீண்டும் தீவிரமாகத் தேடினர். அக்டோபர் 16ஆம் தேதி காலை அங்கிருந்த புதர்களுக்கு இடையே பஷீரின் செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அருகிலிருந்த சிறிய நீரோடையின் பக்கத்தில் அவரது துப்பாக்கியும் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் தேடியபோது, புதிதாகத் தோண்டப்பட்ட மண் பகுதி காவலர்களின் கவனத்தை ஈர்த்தது. அங்கு தோண்டிப் பார்த்தபோது, பஷீரின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், பழைய நிலத்தகராறு ஒன்றைக் கண்டறிந்தனர். பஷீருக்கும் அவரது உறவினரான பஷீர் அகமது தார் என்பவருக்கும் இடையே ஏற்கெனவே நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்துள்ளது. இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகை முழுமையாக மறையவில்லை என விசாரணையில் தெரியவந்தது. பஷீரின் தந்தை குலாம் முஸ்தபா, சுமார் 40 மர்லா நிலத்தை தனது சகோதரர் அப்துல் அஜீஸுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு, அந்த நிலம் விற்பனை செய்யப்படவில்லை என்று பஷீர் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பின்னர் உறவினர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். நிலமும் பஷீரிடம் ஒப்படைக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அதை விற்பனை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி காலை காட்டுப்பாதையில் தனியாக வந்த பஷீரை, அவரது உறவினர் பஷீர் அகமது தாரும், அவரது மகன் நசீர் அகமது தாரும் சந்தித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், நசீர் இரும்புக் கம்பியால் பஷீரின் தலையின் பின்பகுதியில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த அவரை, சத்தமிட முடியாதபடி வாயில் கற்களையும் மண்ணையும் திணித்து, ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்த குழிக்குள் போட்டு உயிருடன் புதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்த இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் அவர்களது செல்போன் இருப்பிடமும் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நிலப்பிரச்சினை, ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே சிதைத்துள்ளது. பணிக்குச் சென்றவர் வீடு திரும்புவார் என்று காத்திருந்த மனைவிக்கும் மகளுக்கும் கிடைத்தது பேரதிர்ச்சிதான். உறவுகளுக்குள் ஏற்பட்ட சிறிய மனக்கசப்பும் சொத்துப் பிரச்சினையும் எந்த அளவுக்குக் கொடூரமான முடிவை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு சோகமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.