

வீட்டுப் பராமரிப்பு விளம்பரத்திற்கு விண்ணப்பித்த கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், அமெரிக்காவின் புளோரிடாவிற்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, ஆவணங்கள் பறிக்கப்பட்டு, லேக் வொர்த் பீச்சில் உள்ள ஒரு விபச்சார விடுதிக்குள் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லபட்ட திடுக்கிடும் தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் புளோரிடாவில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியுடன், மணிக்கு 35 டாலர் ஊதியம் வழங்கும் வீட்டுப் பராமரிப்புப் பணிக்கான விளம்பரத்திற்குப் பதிலளித்துள்ளார். இதனையடுத்து, அவர் பதிலளித்த வீட்டு பராமரிப்பாளர் வேலை உறுதியானதாக கூறிய நிலையில், அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த பெண் வந்துள்ளார். அப்போது சில நபர்கள் அந்த பெண்ணின் விமானப் பயணச் செலவைச் செலுத்தியதாகவும், லேக் வொர்த் பீச்சில் உள்ள ஒரு வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்ல ஊபர் வண்டியை ஏற்பாடு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண், புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு உள்ளே நுழைந்ததும், அவர் மூன்று பெண்களை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவரது வாழ்க்கை ஒரு கொடூரமான நிகழ்வாக மாறத்தொடங்கியுள்ளது. அந்த மூன்று பேரும் தனது கடவுச்சீட்டை பறித்துக்கொண்டு, வீடுகளைச் சுத்தம் செய்வது உன்னுடைய வேலை அல்ல என்றும், வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு கொள்வதுதான் உன்னுடைய வேலை என்றும் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட பெண் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பெண் ஒரே நாளில் குறைந்தது ஏழு ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் துப்பறிவாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் சமயங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணை கண்காணிக்க யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்களில் பலர் வன்முறையாளர்களாக இருந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். பல ஆண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும், அவரைத் துன்புறுத்தி கழுத்தை நெரிப்பார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தன்னை விட்டுவிடும் படி கெஞ்சியபோது மிரட்டும் தொனியில் பேசியதோடு, நாடு கடத்திவிடுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், அந்த பெண் தங்கியிருந்த வீட்டின் கதவுகள் வெளியிலிருந்து சங்கிலி மற்றும் பாதுகாப்புக் கதவு மூலம் பூட்டப்பட்டிருந்ததாகவும், படுக்கையறை ஜன்னல்கள் ஒட்டுப்பலகை ஒன்றால் மூடப்பட்டிருந்ததாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒரு நாள் சமயம் பார்த்து அதிகாலையில், அந்த பெண் ஒரு விளக்கைக் கொண்டு ஒட்டுப்பலகை ஜன்னல் திரைகளை உடைத்து, அந்த ஜன்னல் வழியாக ஏறித் தப்பித்துள்ளார். மேலும் அந்த வீட்டில் ஒரு 15 வயது மதிக்கத்தக்க சிறுமி இருப்பதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து புலனாய்வாளர்களால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது. துப்பறிவாளர்கள் அந்த பெண் கூறிய வீட்டை வாரக்கணக்கில் கண்காணித்து, அங்கு ஆண்கள் தொடர்ச்சியாக வந்து சிறிது நேரத்திலேயே வெறுங்கையுடன் சென்றதை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து புலனாய்வாளர்களால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்