மேட்ரிமோனி மூலம் பண மோசடி: நைஜீரியர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
திருமண இணையதளத்தில் போலி விளம்பரம் கொடுத்து சென்னை பெண்ணிடம் ரூ.3.45 லட்சம் மோசடி செய்த நைஜீரியர்கள் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். "ஆப்ரேஷன் D" என்ற பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து டெல்லியில் பதுங்கி இருந்த நைஜிரியர்கள் 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 நைஜிரியர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கைதான 2 நைஜிரியர்கள் மோசடி பணத்தை பெற்று வேறு சில வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் நைஜிரியர்களின் 4 வங்கி கணக்குகளை முடக்கம் செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 17 வங்கி கணக்குகளை கைதானவர்கள் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அது தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய 2 நைஜிரியர்களில் ஒருவர் பெண். அவர்கள் தொடர்பான விவரங்களை டெல்லி போலீசாருக்கு கொடுத்து டெல்லி எங்கு பதுங்கி உள்ளார்கள்? என்பதனை தேடும்படி டெல்லி போலீசாரின் உதவியை நாடி உள்ளது சைபர் கிரைம் போலீசார். கைதான 2 பேரின் பாஸ்போர்ட்களை முடக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி உள்ளனர். தலைமறைவான 2 பேரின் பாஸ்போர்ட் விவரங்களையும் சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.