“காரோடு கடத்தப்பட்ட மாட்டு வியாபாரி” - கேரளாவில் இருந்து தென்காசி வந்தவர் மாயம்.. மேலப்பாவூர் சந்தையில் நடந்தது என்ன?

இறைச்சிக்காக மாடுகளை வாங்கும் வியாபாரம் செய்து வருகிறார்...
keralam
Published on
Updated on
1 min read

கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் 47 வயதுடைய முஸ்தபா, இறைச்சிக்காக மாடுகளை வாங்கும் வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மாட்டுச் சந்தைக்கு அடிக்கடி வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தனது கார் ஓட்டுநரான 29 வயதுடைய நவ்புல் என்பவருடன் மாடுகள் வாங்குவதற்காக பாவூர்சத்திரம் - மேலப்பாவூர் சாலையில் உள்ள தனியார் மாட்டுச் சந்தைக்கு வந்த முஸ்தபா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து முஸ்தபா தனது காருடன் மாயமானதாக தகவல் கிடைத்த நிலையில், அவரது மகன் கேரள போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கேரள போலீசார் அளித்த தகவலின் பேரில், பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்கனி, எஸ்.ஐ. ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், முஸ்தபா நடத்தி வந்த மாடு வியாபாரம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக இந்த கடத்தல் நடந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், முஸ்தபாவுக்கு ஏற்கனவே அறிமுகமான மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (53), அவரது உறவினர்களான கார்த்திக் (27), முத்துராமன் (39), ராமையா (53) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் (29) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து முஸ்தபாவையும், அவருடன் இருந்த ஓட்டுநரையும் மதுரைக்கு கடத்திச் சென்றதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கருப்பையா, முத்துராமன், ராமையா மற்றும் ராஜ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாடு வியாபாரம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கேரள வியாபாரி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com