

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘M.S. Dhoni: The Untold Story நடித்து நாடு முழுக்க புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 2020 - ஆம் ஆண்டு மும்பையில் இருந்த தனது பாந்த்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெபோட்டிசம்தான் காரணமா!?
இந்த தற்கொலை குறித்த சந்தேகம் நாளுக்குநாள் வலுப்பெற தொடங்கியது. மேலும் சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்தி தான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார். ஆனால் அவரின் மரணத்தோடு ஹிந்தி திரை உலகை சேர்ந்த பல பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் ஹிந்தி திரையுலகில் நிலவும், ‘Star Kids’ -ன் ஆதிக்கம் தான்சுஷாந்த்தின் மரணத்திற்கு காரணம் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. மேலும் அவரின் மரணத்திற்கு பிறகு அவரை பொது மேடைகளில் பிரபல குடும்பங்களைச் சேர்ந்த நடிகர்கள் அவமதிக்கும் காட்சிகள் வெளியாகி அவரின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
4 ஆண்டுகளுக்கு பிறகு
சுஷாந்த் சிங்கின் தந்தை தனது மகனின் மரணத்தில் ரியாவிற்கு தொடர்பிருப்பதாக கூறி மனு ஒன்றை அளித்திருந்தார். கே.கே சிங் அளித்த மனுவை விசாரித்து, ஐகோர்ட் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நீக்கியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியாக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது. அந்த அறிக்கையின்படி, ரியா அல்லது வேறு யாரும் சுஷாந்த் சிங் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுஷாந்தின் பொருட்களை ரியா எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் லேப்டாப் மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார். சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளார், எனவே ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது என்பதால் இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிபிஐ அளித்துள்ள இந்த அறிக்கையை ‘கண் துடைப்பு’ என விமர்சித்த கே.கே.சிங் சிபிஐ -ன் அறிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.