“ஜூஸ் குடிக்க நின்ற கார்.. அடுத்த நொடியே கைகலப்பு” - பெண்ணை தாக்கிய திமுக நிர்வாகி.. பார்க்கிங் பிரச்சனையால் விபரீதம்!

கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...
car parking issue
car parking issue
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் மலையாளத் தெருவைச் சேர்ந்தவர் 45 வயதுடைய ரேகா. இவர் தனது பேத்தியின் காதுகுத்து விழாவுக்காக குடும்பத்தினருடன் செங்கல்பட்டு பகுதியில் உள்ள  துணிக்கடைக்கு துணி எடுக்க வந்துள்ளார். ரேகா, அவரது மகன், மகள் மற்றும் மருமகள் என நான்கு பேரும் காரில் வந்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் ஜூஸ் குடிப்பதற்காக காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளனர். அப்போது அருகில் உள்ள ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், ஹோட்டல் முன்பு காரை நிறுத்தக் கூடாது என்றும், உடனடியாக காரை அப்புறப்படுத்துமாறும் கூறியதாக தெரிகிறது.

இதனால் ரேகாவின் குடும்பத்தினருக்கும் ஹோட்டல் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹோட்டல் உரிமையாளரான செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் நரேந்திரன், 30-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் ஹோட்டலில் பணியாற்றிய சிலர் சேர்ந்து ரேகா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் ரேகா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ரேகா தரப்பில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, திமுக நகர செயலாளர் நரேந்திரன் (59), 30-வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ் (45), ராமப்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (40), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சூரியா (32) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் நான்கு பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை நீதிபதி, நரேந்திரன் உள்ளிட்ட நான்கு பேரையும் (செப் 04) ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். செங்கல்பட்டில் காரை நிறுத்திய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com