செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் புதுப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த 7-ம் வகுப்பு சிறுமி தனது வீட்டில் பாத்ரூம் வசதி இல்லாததால் நேற்று இரவு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மறைவான இடத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அதே காரைத்திட்டு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், மற்றும் அவரது கூட்டாளியான அதே காரைத்திட்டு பகுதியை சேர்ந்த அஜய் ஆகிய இருவரும் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர் சிறுமி கூச்சல் போடாத வகையில் இருவரும் அந்த பள்ளி சிறுமியை மிரட்டி சிறுமியின் வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கி சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு இருவரும் மாறி, மாறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவர்களின் இச்சைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒத்துழைக்க மறுத்து சிறுமி போராடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர்.
இதற்கிடையில் காலைக்கடன் கழிக்க சென்று மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை மகளை தேடி வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் உங்கள் மகள் இந்த வழியாகத்தான் சென்றார் என, கொடுத்த தகவலின் பேரில் சந்தேகமடைந்து தேடி வந்த நிலையில் ஒரு மொட்டை மாடியில் சிறுமி அலங்கோலமாக மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு பதறிய அவரது தந்தை பிறகு சுயநினைவின்றி கிடந்த தன் மகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, உடனடியாக மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த மகளிர் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, இக்கொடூர செயலில் ஈடுபட்ட வாயலூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அஜய் மற்றும் 20 வயதுடைய பப்லு என்கிற மகேஷ்வரன் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் அஜய் இறால் பண்ணையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பட்டப்பகலில் 7-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த இந்தத் துயரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.