சென்னையை அடுத்த குரோம்பேட்டை சுந்தரம்மாள் காலனியைச் சேர்ந்த 53 வயது முன்னாள் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், பரங்கிமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு ஆபாச டேட்டிங் செயலி மூலம் பெங்களூரில் வசிக்கும் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய கஞ்சன் லதா சிங் என்பவருடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர், வாட்ஸ்அப் மூலம் கஞ்சன் லதா சிங் மற்றும் மற்றொரு பெண்ணுடன் பேசி பழகி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த (ஆக 26) ஆம் தேதி ஆலந்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறி இரு பெண்களும் அவரை அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார். அங்கு இரு பெண்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், போதையில் அவர் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு கண்விழித்துப் பார்த்தபோது, இரு பெண்களும் அங்கிருந்து மாயமாகியிருந்ததாகவும், தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.4 ஆயிரம் பணமும் காணாமல் போனதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தன்னை விடுதிக்கு வரவழைத்து, போதையில் இருந்தபோது நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பசுபதி தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சன் லதா சிங் பெங்களூரில் தங்கியிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், கஞ்சன் லதா சிங்கை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
போலீஸ் விசாரணையில், டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் அறிமுகமாகி, அவர்களை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று மது அருந்தச் செய்வதாகவும், அவர்கள் போதையில் தூங்கிய பிறகு நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வதாகவும் கஞ்சன் லதா சிங் மீது குற்றச்சாட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதுபோன்ற சம்பவங்களில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், முதல் முறையாக பரங்கிமலை குற்றப்பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கஞ்சன் லதா சிங்கை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அத நபருடன் பழகிய மற்றொரு பெண் யார், அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்