மனைவியை அரிவாளால் வெட்டி, தானும் தற்கொலை செய்த கணவன்! மகனுக்கு அனுப்பிய 'கடைசி மெசேஜ்'

குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்.
மனைவிக்கு அரிவாள் வெட்டு
மனைவிக்கு அரிவாள் வெட்டு மனைவிக்கு அரிவாள் வெட்டு
Published on
Updated on
1 min read

சென்னை, நங்கநல்லூர் தில்லைகங்காநகர் 21வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (52). இவரது மனைவி நாகலட்சுமி(42). இவர்களுக்கு ஹரிஷ் பரத்வாஜ் (21), சைலாஷ் (18) என 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியன் வெகுநாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், நாகலட்சுமி நங்கநல்லூர் மற்றும் அண்ணா நகரில் பட்டுபுடவை விற்பனையகத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். ரஷ்யாவில் முதல் மகன் ஹரிஷ்பரத்வாஜ் மருத்துவம் 2ம் ஆண்டும், சைலாஷ் சென்னையில் உள்ள பல்மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் செலவிற்கு பணம் கேட்டு நச்சரிப்பதால், கணவன் - மனைவிக்குள் பல ஆண்டுகளாக சிறு சிறு சண்டைகள் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவியிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சுப்பிரமணி, மதுரையில் உள்ள சகோதரி வீட்டில் சில மாதங்கள் இருந்துள்ளார். அப்போது, அவரின் முழு செலவிற்கும் அவரது மனைவி நாகலட்சுமி 'Gpay' மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஒன்றரை வாரங்களுக்கு முன் சென்னை திரும்பிய சுப்பிர்மணியன் மீண்டும் தனது மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரி சென்றிருந்த மகனுக்கு செல்போனில் சுப்பிரமணியன் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம். உனக்கு சாப்பாடு வைத்திருக்கிறேன் வந்து சாப்பிடு" என அனுப்பியிருந்தார். சந்தேகமடைந்த சைலாஷ் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீட்டின் ஒரு அறையில் ரத்த வெள்ளத்தில் கை, தலை, கழுத்து ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு தாய் நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து, மற்றொரு அறையில் மின்விசிறியில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து அறிந்த ஆதம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடை நடத்துவதில் கொடுக்கல் - வாங்கல் காரணமாக நாகலட்சுமிக்கு கடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியத்திற்கும் நாகலட்சுமிக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர், வீட்டை விட்டு வெளியேறிய சுப்பிரமணியன் அரிவாளை வாங்கி வந்து தனது மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகலட்சுமி கொலைக்கும், சுப்பிரமணியன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com