“அப்பா.. விஜய் அங்கிள் சொன்ன மாதிரி” - தனக்கு நடந்த பாலியல் தொல்லை பற்றி கூறிய சிறுமி.. ஜனநாயகன் பட காட்சியால் வெளிவந்த உண்மை!

தாய் வேலை செய்யும் வீட்டில் இருந்த பெரியன் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி...
jananayagan movie seen and pocso
jananayagan movie seen and pocso
Published on
Updated on
1 min read

சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு படித்து வரும் அந்தச் சிறுமியின் பெற்றோர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், அவரது தாய் அவ்வப்போது மகளைச் சந்தித்து வந்துள்ளார். மேலும், சிறுமியின் தாய் தான் பணிபுரியும் வீட்டுக்கு சில நேரங்களில் தனது மகன் மற்றும் மகளை அழைத்துச் சென்று ஓரிரு நாட்கள் தங்க வைத்துவிட்டு, பின்னர் அவர்களை மீண்டும் தந்தையிடம் அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த (ஜூலை 30) - ஆம் தேதி சிறுமியின் தந்தை தனது இரு குழந்தைகளையும் திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சிறுமி, தனது தந்தையிடம் தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது, “அப்பா விஜய் அங்கிள் சொன்னது போல்.. எனக்கு நடந்தது” என கூறி திரைப்படத்தில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சியை பார்த்ததாகவும், அதில் கூறப்பட்டதைப் போல தனது தாய் வேலை செய்யும் வீட்டில் இருந்த பெரியன் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

மகள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்படத்தில் இடம்பெற்ற குட் டச், பேட் டச் குறித்த விழிப்புணர்வு காட்சியைப் பார்த்த சிறுமி, தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் சம்பவத்தை தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com