“நள்ளிரவில் குத்தி கொல்லப்பட்ட கூலித்தொழிலாளி” - நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு.. டாஸ்மாக் கடை அருகே கிடந்த சடலம்!

ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சிறிய காய்கறி வெட்டும் கத்தியால்...
Chennai Madhavaram Murder
Chennai Madhavaram Murder
Published on
Updated on
1 min read

சென்னை மாதவரம் சின்ன மாத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, விளையாடிக் கொண்டிருந்த கூலி தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ராமராஜ் (35), ராஜா (52), பெருமாள் (43), லோகநாதன் என்கிற பட்டு (32), முரளி (35) ஆகிய 5 பேரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். நேற்று மதியம் 5 பேரும் டாஸ்மாக் கடை அருகே தாயபாஸ் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, நேற்று இரவு மீண்டும் அதே பகுதியில் ராமராஜ், ராஜா, பெருமாள் ஆகிய 3 பேரும் மதுபோதையில் பரமபதம் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த லோகநாதன் என்ற பட்டு மற்றும் முரளி ஆகியோர், ஏற்கெனவே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 பேரிடமும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சிறிய காய்கறி வெட்டும் கத்தியால் ராமராஜ், ராஜா, பெருமாள் ஆகியோரை சரமாரியாக வெட்டியும் குத்தியும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ராமராஜுக்கு பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ராஜா மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் சிறிய அளவிலான வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய போலீசார் உடனடியாக அங்கு சென்று, காயமடைந்த ராஜா மற்றும் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், உயிரிழந்த ராமராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முரளி மற்றும் லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com