“கேர் டேக்கராக வந்த பெண்” - ஒரு மாதமாக உறுத்திய மூதாட்டியின் நகைகள்.. உயிரை காப்பாற்றிய அண்ணன் தங்கை!

எனவே தண்ணீர் எடுத்து வர சமையலறை சென்றுள்ளார் மூதாட்டி.
rajeswari and indhira
rajeswari and indhira
Published on
Updated on
2 min read

சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் தெற்கு தெருவை சேர்ந்தவர் 81 வயதான மூதாட்டி ராஜேஸ்வரி. இவரது மகன் தனியாக வீடு எடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் மயிலாப்பூரில் மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.

ராஜேஸ்வரியின் வீட்டிற்கு மேல்மாடியில் ரேவதி என்ற மூதாட்டியும் தனியாக வசித்து வந்தார். ரேவதியின் வாரிசுகள் ரேவதியை பார்த்துக்கொள்ள கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அரியலூரை சேர்ந்த (54) வயதான இந்திரா என்பவரை ‘மேன்பவர் ஏஜென்சி’ மூலம் பணி அமர்த்தி உள்ளனர்.

ஒரு மாதமாக ரேவதி வீட்டில் தங்கி வேலை செய்து வந்த இந்திரா கீழ் வீட்டில் இருக்கும் ராஜேஸ்வரி தனியாக இருப்பதையும் அவரிடம் தங்க நகைகள் அதிகம் வைத்திருப்பதையும் கவனித்து வந்துள்ளார். மூதாட்டியிடம் இருக்கும் தங்க நகைகளை கொள்ளையடித்து சொந்த ஊருக்கு சென்று நன்றாக வாழலாம் என திட்டமிட்டுள்ளார் இந்திராணி.

இத்திட்டத்தின் படி நேற்று காலை வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டியிடம் சென்று பேச்சு  கொடுத்துள்ளார். அப்போது தாகமாக உள்ளது என மூதாட்டியிடம் தண்ணீர் கேட்டுள்ளார் இந்திரா. எனவே தண்ணீர் எடுத்து வர சமையலறை சென்றுள்ளார் மூதாட்டி , இந்நிலையில் மூதாட்டியை பின் தொடர்ந்து சென்ற இந்திரா அவரை கீழே  தள்ளிவிட்டு சமையலறையில் இருந்த கத்தியை பயன்படுத்தி முதுகில் தாக்கியுள்ளார்.

பின்னர் கீழே விழுந்து கிடந்த மூதாட்டியிடம் உள்ள நகைகளை பறித்து கொண்டு மூதாட்டியின் கழுத்தில் கால் வைத்து நெரித்துள்ளார். வலி தாங்கமுடியாமல் மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். 

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டில் வசித்து வரும் வைஷ்ணவி என்ற பெண்ணும் அவரது அண்ணனும் அவர் வீட்டுக்கு உடனடியாக சென்றுள்ளனர். அங்கு இந்திராவிடம் இருந்து மூதாட்டியை காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி செய்துள்ளனர்.

இது குறித்து இந்திராவிடம் வைஷ்ணவி “ இங்க என்ன பண்ணிட்டு இருக்க அதுவும் அவங்க கழுத்துல கால் வச்சு அழுத்திட்டு இருக்க.. என்ன நடக்குது இங்க? என கேட்டுள்ளார். அதற்கு இந்திரா “ எனக்கு எதுவும் தெரியாது. யாரோ ஒருவர் வந்து நகைகளை திருடிவிட்டு இந்த அம்மாவை கீழே தள்ளி விட்டு ஓடினார்கள்.. நான் காப்பாத்த தான் வந்தேன்” என்று முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

இதையெல்லாம் கேட்டு சுதாரித்த வைஷ்ணவி மூதாட்டியின் மகனுக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இந்திராவை சோதித்ததில் மூதாட்டியின் நகைகள் இந்திராவிடமே இருந்துள்ளது. இதை வைத்து போலீசார் இந்திராவிடம் விசாரணை மேற்கொண்டதில் செய்த குற்றங்களை இந்திரா ஒப்புக்கொண்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு விரைவாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் குற்றவாளியையும் பிடித்து கொடுத்த வைஷ்ணவி மற்றும் அவரது அண்ணணனை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com