“ஒழுங்கா இல்ல.. கொன்னு போட்டு போயிடுவேன்” - ஏசி மெக்கானிக் கொலையில் வெளிவந்த உண்மை.. கைது செய்யப்பட்ட சிறுவர்கள்!

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?...
Chennai Mylapore Sathiyaseelan Murder
Chennai Mylapore Sathiyaseelan Murder
Published on: 
Updated on: 
2 min read

சென்னை மயிலாப்பூரில் நண்பர்களை சந்திக்க வந்த 21 வயது ஏசி மெக்கானிக், மர்ம கும்பலால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (21). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு மைலாப்பூர் வீரபத்திரன் தெருவில் வசித்து வந்தபோது, நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் சத்தியசீலனின் குடும்பத்தினர் மயிலாப்பூரில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேளச்சேரிக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும், மயிலாப்பூரில் வசித்து வரும் தனது நண்பர் சபரியை சந்திப்பதற்காக சத்தியசீலன் அடிக்கடி அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று(அக் 06) மாலை சுமார் 6 மணியளவில் சபரியை சந்திப்பதற்காக சத்தியசீலன் மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவுக்கு வந்துள்ளார்.

அப்போது சத்திய சீலன் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் திடீரென சத்தியசீலனை வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் கத்தியை எடுத்து சத்தியசீலனின் தலை, கை மற்றும் தொண்டை பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு, அதே இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்து கீழே விழுந்த சத்தியசீலனை அவரது நண்பர்கள் மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சத்தியசீலன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சத்தியசீலன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் தனக்கு ஆதரவாக சத்தியசீலனை அழைத்து சென்ற நிலையில் அவர் எதிர் தரப்பு மாணவர்களை “ஒழுங்கா இல்ல.. கொன்னு போட்டு போயிடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சத்தியசீலனை தாக்க திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் சாய்நாத், விரோஷன், நிதிஷ் உள்ளிட்டோர் மற்றும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி கல்லூரி மாணவர்களை சிறையிலும், பள்ளி மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். மயிலாப்பூரில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com