“தவெக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை” - 17 ஆண்டுகள் காத்திருந்த பழிக்கு பழி.. அடுத்தடுத்து 5 குற்றவாளிகள் கைது!

பெரியப்பா சிவா என்பவர், கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது...
Chennai Vannandurai Kannan Murder
Chennai Vannandurai Kannan Murder
Published on
Updated on
2 min read

சென்னை வண்ணான்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2009 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளின் முன்விரோதமே முக்கிய காரணமாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அடையாறு, வண்ணான்துறை ராமசாமி அவென்யூ, எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த 45 வயதுடைய கண்ணன், ஐ.டி. நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் மீது சில வழக்குகள் உள்ளதால், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார். எனவே அவரது நடவடிக்கைகள் காவல்துறையினரால் நேரடியாகவும், ரகசியமாகவும் கண்காணிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்

இந்த நிலையில், நேற்று (செப் -05) இரவு கண்ணன் வண்ணான்துறை பகுதியில் நின்று தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துரத்தி கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Adyar Vannandurai Murder Case
Adyar Vannandurai Murder Case

தொடர்ந்து அவரது சித்தி மகன் 33 வயதுடைய புருஷோத்தமன் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெ-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் மேற்பார்வையில், உதவி ஆணையர் மற்றும் சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதுடன், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக, கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பரணி (20), ராகேஷ் (20), நரேஷ் (20), மணிகண்டன் (20), ஹரிஹரன் (20) ஆகிய 5 பேரை இன்று (செப் 06) ஆம் தேதி மாலை போலீஸார் கைது செய்தனர்.

Adyar Vannandurai Murder Case
Adyar Vannandurai Murder Case

பழிக்கு பழி சம்பவம்

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கண்ணன் கொலைக்கான பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு அடையாறு பகுதியில் தற்போது கைது செய்யப்பட்ட பரணியின் பெரியப்பா சிவா என்பவர், கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பரணியின் தந்தை வேலு கடந்த 2016ஆம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இரு கொலைகளின் பின்னணியில் நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கில் பரணி தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்ததாக விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com