

ராமேஸ்வரம் சம்பை கிராமத்தைச் சேர்ந்த நாகபாண்டி என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி யோக நந்தினி. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்படுட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை பேறுக்காக மருத்துவமனைக்கு செல்லாமல் நேற்று இரவு வீட்டிலேயே நாத்தனார் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் குறை பிரசவமாக ஏழு மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும், மீண்டும் ஒரு பெண் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தில் உயிருடன் இருந்த குழந்தையை வீட்டின் அருகில் யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்துள்ளனர். அதையடுத்து லோக நந்தினியை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லோக நந்தினியை பரிசோதனை செய்த டாக்டர், உங்களுக்கு பிறந்த குழந்தை எங்கே? என்று கேட்டபோது, முதலில் குழந்தை பிறந்தது தெரியாது என நாடகம் ஆடி உள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுப்போம்.. குழந்தை எங்கே என்று சொல்லுங்கள் என்று மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு குழந்தை இறந்து விட்டது, அதனால் அதை புதைத்து விட்டோம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் புதைத்த குழந்தையை மீண்டும் தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது அந்த குழந்தை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராமேஸ்வரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண் குழந்தையை உயிருடன் புதைத்தது உறுதி செய்யபட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து குழந்தையின் தாயார் லோக நந்தினி மற்றும் மாமனார் கிருஷ்ணன் கணவர் நாக பாண்டி நாத்தனார் முனீஸ்வரி ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.