கோவை மாநகரின் முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சித் தலமாக விளங்கும் வாலாங்குளம் பகுதியில், பெண்களின் சேலைகள் மற்றும் உள்ளாடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வாலாங்குளத்திற்கு தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்ளவும், பொழுது போக்கிற்காகவும் வந்து செல்கின்றனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், வாலாங்குளத்தின் நடைபாதைகள் மற்றும் புதர்ப் பகுதிகளில் பெண்களின் சேலைகளும் பத்துக்கும் மேற்பட்ட உள்ளாடைகளும் சிதறிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த நடைபயிற்சியாளர் ஒருவர், அவற்றைப் புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகத் தெரிகிறது. இந்தக் காட்சிகள் பொது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஒரே பகுதியில் இவ்வளவு ஆடைகள் கிடப்பதற்கான காரணம் என்ன, அவை எவ்வாறு அங்கு வந்தன என்பது குறித்து பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
ஏதேனும் சமூக விரோத செயல்கள் பூங்காவில் நடக்கிறதா? அல்லது காதலர்களின் அத்துமீறலா? என்று பொதுமக்கள் கேவி எழுப்புகின்றனர். இருப்பினும், இதன் பின்னணி குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் இதுபோன்ற சம்பவம் குறித்து தகவல் வெளியாகியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வாலாங்குளம் பகுதியில் நிலவும் சூழலை ஆய்வு செய்து, ஆடைகள் அங்கு கிடப்பதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பூங்காவில் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பூங்காவில் பெண்களின் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் சிதறிக் கிடப்பதன் பின்னணி என்ன என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.