“பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம்” - வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய வாலிபர்கள்.. மீண்டும் கோவையில் பரபரப்பு!

மரிய ராபினும், கிரிஷ் சாமுவேல் குமாரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த...
“பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம்” -  வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய வாலிபர்கள்.. மீண்டும் கோவையில் பரபரப்பு!
Published on
Updated on
2 min read

கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனியாக வீடு எடுத்து வசித்து வீடியோ எடிட்டிங் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2023-ஆம் ஆண்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு தற்போது 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவரை பிரிந்த பிறகு, சூலூர் கலையரங்கம் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அறையை வாடகைக்கு எடுத்து வீடியோ எடிட்டிங் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது, அதே கட்டிடத்தின் பக்கத்து அறையில் தங்கி இருந்த 28 வயதுடைய அந்தோணி மரிய ராபின் என்பவருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் நாளடைவில் நெருக்கம் அதிகரித்த நிலையில், அந்தோணி மரிய ராபின், இளம்பெண்ணின் குடும்ப சூழ்நிலையை அறிந்து, "உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நம்பிக்கையின் பேரில், கடந்த ஒரு ஆண்டாக இருவரும் நெருக்கமாக பழகி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். ஆனால், இதற்கிடையில் அந்தோணி மரிய ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததை அறிந்த இளம் பெண் இதுகுறித்து மரிய ராபினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதன் காரணமாக இருவரும் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று மதியம் அந்தோணி மரிய ராபின், தனது நண்பரான 30 வயதுடைய கிரிஷ் சாமுவேல் குமாரை அழைத்துக் கொண்டு இளம் பெண்ணின் அலுவலகத்திற்கு வந்து, சமாதானமாக பேசுவதாக கூறியுள்ளார். அப்போது, இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து அவர் மயக்கமடைந்த நிலையில், அந்தோணி மரிய ராபினும், கிரிஷ் சாமுவேல் குமாரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் தெளிந்த இளம்பெண் நடந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, இருவரும் தாங்கள் பாலியல் உறவு கொண்ட காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக கூறி மிரட்டி இருக்கின்றனர்.

Admin

மேலும், "என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதுடன், உன்னையும் உன் மகனையும் கொலை செய்து விடுவோம்" என மரிய ராபின் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய அந்தோணி மரிய ராபின் மற்றும் திருச்சியைச் சேர்ந்த 30 வயதுடைய கிரிஷ் சாமுவேல் குமார் ஆகியோர் மீது கூட்டு பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

இதையடுத்து, சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அந்தோணி மரிய ராபினை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை ஏற்படுத்தி, மயக்க மருந்து கொடுத்து நண்பருடன் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படும் இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com