கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் 20 வயதுடைய ரெஜினா. இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த நிலையில் இவருக்கும் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய முகேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முகேஷ் நாங்குநேரி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து முகேஷ் மற்றும் ரெஜினா அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்திருக்கின்றனர். அவ்வப்போது ரெஜினா கல்லூரிக்கு செல்வதாகவும், நண்பர்கள் வீட்டிற்கு செல்வதாகவும் கூறிவிட்டு முகேஷுடன் ஊர் சுற்றி வந்த நிலையில் கர்ப்பமடைந்துள்ளார். இது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என நினைத்து ரெஜினா தனது காதல் மற்றும் கர்ப்பம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்திருக்கிறார்.
மேலும் படிக்க : கழிவறைக்குள் கிடந்த பிஞ்சு குழந்தை!
இந்நிலையில் ரெஜினாவிற்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவரே நர்சிங் பிடித்திருப்பதால் கழிவறைக்கு சென்று குழந்தை பெற்று எடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் உடனடியாக இது குறித்து முகேஷிடம் செல்போன் மூலம் தெரிவித்த நிலையில் அவர் “குழந்தையை எங்காவது வீசிவிட்டு வா நாம் வாழலாம்” என கூறியுள்ளார். இதை கேட்ட ரெஜினா பிறந்த பச்சிளம் குழந்தையை பையில் போட்டு பக்கெட்டில் அடைத்து அவரது வீட்டிற்கு அருகில் இருந்த கோவிலுக்கு பின்புறம் வைத்திருக்கிறார்.
இதில் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் பக்கெட்டை பார்த்த அப்பகுதி பெண் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் திறந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ரெஜினாவை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் முகேஷையும் கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். காதலித்து கர்ப்பமடைந்த மாணவி குழந்தையை பெற்றெடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.