

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள் மீது 50 பக்க அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றிரவு ஆப்தே பகுதியில் நடந்த முதியவர் கொலையிலும் இவர்கள் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் அருகே காரில் தனது காதலனுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த கல்லூரி மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பீளமேடு காவல் துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்ற கருப்பசாமி, அவருடைய தம்பி காளீஸ்வரன் என்ற கார்த்திக், குணா என்ற தவசி ஆகியோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் காயம் குணம் அடைந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அத்துடன் 400 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் 13 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக கருப்புசாமியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி கார்த்திக்கையும், மூன்றாவது குற்றவாளியாக தவசியையும் போலீசார் சேர்த்துள்ளனர்.
இவர்களிடம் நடந்த பட்ட விசாரணையில் ஏற்கனவே மூவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அன்றிரவே அப்பகுதியில் இருந்த முதியவரிடம் கொள்ளை அடித்து அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குற்றவாளிகளான கருப்பசாமி, கார்த்திக், மற்றும் தவசி ஆகியவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.