“ஐயோ அம்மா வலிக்குது” - கோவை கடத்தலில் வெளியான ஆடியோ.. கதறிய பிங்க் சுடிதார் அணிந்திருந்த பெண்!
கோவை இருகூரில் நேற்று இரவு காரில் பெண் கடத்தப்பட்டதாக சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு பின் பகுதியில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் தற்போது காரில் பெண் கடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை பெண் கடத்தப்பட்டதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என தெரிவிக்கும் காவல்துறையினர். விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை செய்த ஆடியோ வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில் பேசிய பெண் “நான் அருகில் உள்ள எலக்ட்ரானிக் கம்பெனியில் வேலை செய்கிறேன் அன்று இரவு வேலையை முடித்துவிட்டு வந்தபோது அப்பகுதியில் ஒரு வெள்ளை நிற கார் நின்றுகொண்டிருந்தது அதில் ஓட்டுநர் இருக்கையில் வெள்ளை சட்டை அணிந்த ஒருவரும் அவருக்கு பக்கத்தில் பிங்க் கலர் சுடிதார் போட்டு வெள்ளை நிற துப்பட்டா அணிந்த ஒரு பெண்ணும் இருந்தனர். எப்போதும் அந்த இடத்தில் இருட்டாகத்தான் அன்றும் அதே போல தான் இருந்தது பெண் ஒருவர் கத்தும் சத்தம் கேட்டது, சத்தம் கேட்டு திரும்பி பார்த்த போது அந்த ஆண் பெண்ணின் கழுத்தை பிடித்து நெரித்துக் கொண்டிருந்தார்.
காரின் பின் பக்க கதவு திறந்து இருந்தது பின் பக்க இருக்கையில் யாரோ ஒருவர் அமர்ந்து கொண்டிருப்பதை நான் அந்த கார் செல்லும் போது தான் பார்த்தேன். அங்கு வந்தவர்களிடம் அந்த பெண் குறித்து சொல்லி உதவி கேட்க வாகனங்களை நிறுத்த சொன்னேன் ஒருவர் கூட வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். பின்னர் ஒரே ஒரு பெண் மட்டும் வாகனத்தை நிறுத்தினர். அவரும் நடந்ததை கேட்டுவிட்டு என்னை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பெண் எவ்வாறு அலறினர் என காவல்துறை கேட்டபோது அவர் ஐயோ, அம்மா வலிக்கிறது என்று கத்தியதாகவும், காப்பாற்றுங்கள் என்று கத்தவில்லை எனவும், உள்ளே ஏதோ சண்டை நடப்பது போன்று தான் கத்தியதாக கூறியவர், குடும்ப சண்டையாக இருக்கும் என விட்டு விட்டதாக விசாரணை அதிகாரியிடம் பேசும் ஆடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
