பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு... பள்ளி மாணவர்கள் மீதும் வன்மம்!!

பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு... பள்ளி மாணவர்கள் மீதும் வன்மம்!!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற ஊரில் பட்டியலின மக்கள் வசித்து வந்த பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. 

கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவத்தின் தாக்கம் இன்று வரை குறையாத நிலையில் இதே போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறி மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சமையலர் முத்து செல்வி என்பவர் 6-ம் தேதியன்று மாலையில் பாத்திரம் கழுவுவதற்கு சென்றார். அப்போது சின்டெக்ஸ் தொட்டியை திறந்தபோது அதில் தண்ணீல் கலங்கலாக இருந்துள்ளது. மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றத்துடன் இருந்த அந்த நீரை ஆராய்ந்து பார்த்ததில் அதில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனே இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் போலீசார் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் குடிநீர் தொட்டியை அகற்ற முடிவெடுத்தனர்.

பின்னர் அதே இடத்தில் சிமெண்ட் தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்த அதிகாரிகள் குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்தது குறித்து விசாரணை செய்யுமாறு விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். 

ஏற்கெனவே குடிநீரில் மலம் கலந்த வேங்கை வயல் சம்பவம் இன்னும் தணியாத நிலையில் மீண்டும் இதே சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com