வரதட்சணை தராததால் மனைவியை அடித்து புதைத்த கொடூரன்..

கர்நாடக மாநிலத்தில் கட்டிய மனைவியை சித்ரவதை செய்து கொன்று புதைத்துள்ளான் ஒரு கொடூரக் கணவன்.. வரதட்சணை தரவில்லை என்ற காரணத்தினால் நடந்த இந்த சம்பவத்தின் முழு விவரம் என்ன? பார்க்கலாம்..
வரதட்சணை தராததால்  மனைவியை அடித்து  புதைத்த கொடூரன்..
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கங்ககொண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார். 25 வயதான இவருக்கும் ஐகூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷப்பா என்பவரின் மகள் சந்திரகலாவுக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

சந்திரகலாவின் தந்தை பால் வியாபாரம் செய்து குறைவாகவே சம்பாதித்து வந்தாலும் மோகன்குமார் கேட்ட அளவுக்கு வரதட்சணைப் பொருட்கள், பணத்தை அளித்திருக்கிறார். படுவிமரிசையாக நடந்து முடிந்த இவர்களின் திருமணத்தை ஊரே வியந்தபோதும், கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்து வந்துள்ளது. 

மணமான ஒரே மாதத்தில் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார். சந்திரகலாவை நாள்தோறும் அடித்து துன்புறுத்திய மோகன்குமார், உங்கள் வீட்டில் போட்ட வரதட்சணை போதாது என்றும், மீண்டும் தந்தையிடம் சென்று வரதட்சணை வாங்கி விட்டு வா என்றும் கூறியதோடு சித்ரவதை செய்து வந்துள்ளார். 

கணவனால் விரட்டப்பட்ட சந்திரகலா, இதுகுறித்து கூறினால் தாய் தந்தையின் மனம் வருத்தமடையும் என நடந்ததை மறைத்துள்ளார். ஆனால் தந்தை வீட்டுக்கு சென்று எதுவும் கொண்டு வராததால் கடும் ஆத்திரமடைந்த மோகன்குமார், கர்ப்பமாக இருந்த மனைவியை கடுமையாக அடித்து உதைத்தார். 

சந்திரகலா 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லாமலும், தேவையான உணவு வழங்காமலும் கொடுமைப்படுத்தி வந்தார் மோகன்குமார். ஒரு கட்டத்தில் பணப்பேய் மோகன்குமாரை ஆட்டிப்படைத்ததைத் தொடர்ந்து, 6 மாதம் கர்ப்பமாய் இருந்த சந்திரகலாவை கழுத்தை நெரித்துக் கொன்றார். 

ஆசை மனைவியை சத்தமே இல்லாமல் தீர்த்துக் கட்டியவர் அவரது உடலை ரகசியமாக தூக்கிச் சென்று உணுசேகட்டே பகுதியில் உள்ள வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்து விட்டார். ஆனால் இந்த சம்பவம் எதுவுமே நடக்காதது போல வீட்டுக்கு திரும்பியவர் வித்தியாசமான ஒரு நாடகமாடினார். 

கடந்த அக்டோபர் மாதம் அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு சென்ற மோகன் குமார், தனது மனைவி வீட்டில் பணத்தை எடுத்துக் கொண்டு எவனுடனேயோ ஓடி விட்டதாக  அப்பட்டமாக பொய்யுரைத்து புகார் அளித்தார் மோகன் குமார். 

கணவன் வீட்டில் வரதட்சணை கொடுமை நடந்திருப்பதாகவும், இதனால்தான் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் மகள் எங்கேயோ சென்று விட்டதாகவும் சந்திரகலாவின் பெற்றோர் நினைத்து வந்தனர். ஆனால் வனப்பகுதியில் கிடைத்த சடலத்தை வைத்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், கொலையாளி மோகன்குமாரை தட்டித் தூக்கினர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com