
காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில், இரு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட ஏழு காவல்துறையினருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கருமலை கூடல் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், 2015ஆம் ஆண்டு சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன் என்பவரை மேட்டூர் காவல் நிலைய அப்போதைய உதவி ஆய்வாளர் ஹரிஹரன், கருமலைக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் வேணுகோபால் மற்றும் காவலர்கள் என ஏழு பேர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளான கோகுல கண்ணன் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து அப்போதைய தேமுதிக எம்எல்ஏ பார்த்திபன் மற்றும் கோகுல கண்ணனின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அறிக்கைகளை பரிசீலித்ததில், காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் தான் கோகுல கண்ணன் மரணம் அடைந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு ஒரு மாதத்தில் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த இழப்பீட்டுத் தொகையில் தலா 2 லட்சம் ரூபாயை உதவி ஆய்வாளர் ஹரிகரன் மற்றும் கீர்த்தி வாசன் ஆகியோரிடம் இருந்தும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வேணுகோபால் சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்து தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மூன்று காவலர்களிடமிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும் வசூலிக்க வேண்டும் என அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஏழு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்