

தூத்துக்குடி மாவட்டத்தில் தனது சொந்த மகளுக்கே தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வருகிறார். பேண்ட் வாத்தியக் கலைஞராக பணிபுரியும் இவருக்கு மனைவி முத்துமாரி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பன்னிரண்டாம் வகுப்பிலும், இளைய மகள் பத்தாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். அருணாச்சலம் மது அருந்தும் பழக்கத்தால் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மது போதையில் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்வது வழக்கமாக இருந்ததாகவும், அந்த சமயங்களில் மூத்த மகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளையும் அளித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மது போதையில் வீட்டிற்கு வந்த அருணாச்சலம், தனது மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாயை பாதுகாக்கவும், தகராறை தடுக்கவும் முயன்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக ‘சிங்கப்பெண்’ உதவி எண் 1091-ஐ தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்பட்டதில், தனது தந்தையான அருணாச்சலம் நீண்ட காலமாக மது போதையில் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருணாச்சலத்தை கைது செய்தனர். மேலும், சிறுமியின் வாக்குமூலம் மற்றும் முதற்கட்ட விசாரணை அடிப்படையில், அவர்மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அருணாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல்துறையில் பணியாற்றி வந்த ஒருவர் தனது சொந்த மகளுக்கே பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கைது நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.