அரசு வேலைக்காக பெற்ற தாயையே கொலை செய்த மகள்!விபத்து போல் நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம்

அவரது மரணத்திற்குப் பிறகு, கருணை அடிப்படையில் நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தர் பணியை
jaipur murder case
Published on
Updated on
2 min read

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சொத்து மற்றும் கருணை அடிப்படையில் கிடைக்கும் அரசு வேலையை கைப்பற்றுவதற்காக 23 வயது இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாயைக் கொலை செய்ய உறவினர்களுடன் சேர்ந்து சதி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையை சாலை விபத்து போல் சித்தரித்து போலீசாரை திசைதிருப்ப முயன்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

போலீசார் தகவலின்படி, ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ரவீந்திரா நகரைச் சேர்ந்த 45 வயதான நீரஜ் ஷர்மா, கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதியதில் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. இதையடுத்து, இது சாலை விபத்து எனக் கருதி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், உயிரிழந்த நீரஜ் ஷர்மாவின் சகோதரர் ராகேஷ், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அக்காவின் மகள் மற்றும் சில உறவினர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நீரஜ் ஷர்மாவின் மரணம் விபத்து அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரியவந்தது. குற்றவாளிகள், அவரைக் கொலை செய்ய நபர்களை நியமித்து, பின்னர் அதை சாலை விபத்து போல் காட்ட திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குடும்ப சொத்து மற்றும் அரசு வேலை தொடர்பான பிரச்சினை இருந்தது தெரியவந்துள்ளது. நீரஜ் ஷர்மாவின் கணவர் விஜய் குமார் ஷர்மா சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, கருணை அடிப்படையில் நீதிமன்றத்தில் இளநிலை எழுத்தர் பணியை நீரஜ் ஷர்மா பெற்றிருந்தார்.

அந்த அரசு வேலை தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவரது 23 வயது மகள் ஆயுஷி விரும்பியதாகக் கூறப்படுகிறது. தனது தந்தை இறந்த பிறகு, அந்த வேலையை தனக்கு வழங்குமாறு தாயிடம் பலமுறை கேட்டதாகவும், ஆனால் தனது தாய் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அரசு வேலையையும் குடும்ப சொத்தையும் கைப்பற்றும் நோக்கில் ஆயுஷி, தனது உறவினருடன் சேர்ந்து தாயைக் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கூலிப்படையினரை வைத்து நீரஜ் ஷர்மாவை கொலை செய்து, அதை சாலை விபத்து என நம்ப வைக்க முயன்றுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆயுஷி, அவரது மாமா, உறவினர் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேக நபரை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சாலை விபத்து எனத் தோன்றிய சம்பவம், குடும்ப சொத்து மற்றும் அரசு வேலைக்காக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்திருப்பது ஜெய்ப்பூர் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com