மறுவாழ்வு மையத்தில் மனித உரிமை மீறல்... சிகிச்சைக்கு வந்தவர் உயிரிழந்த பரிதாபம்!

மறுவாழ்வு மையத்தில் மனித உரிமை மீறல்... சிகிச்சைக்கு வந்தவர் உயிரிழந்த பரிதாபம்!
Published on
Updated on
1 min read

சென்னை வளசரவாக்கத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக வந்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விஜய் (வயது 27). இவர் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். அவரை அவரது அண்ணன் ராஜேஷ் வளசரவாக்கத்தில் உள்ள கிரின் லைப் பவுண்டேசன் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சேர்த்துள்ளார்.

இந்தநிலையில், விஜய்-க்கு உடல்நிலை பாதிப்படைந்ததாக கூறி, அவருடைய குடும்பத்தினர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், கீழ்பாக்கம் அரசு மருத்துவம்னையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த விஜயின் சகோதரர் ராஜேஷ் போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரிடம் விவரம் கேட்டபோது, விஜய்யின் பிரேதத்தை கூட தர மாட்டோம் என்று மிரட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து , கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு  சென்று பார்த்த போது விஜய்யின் கை மற்றும் கால்களில் ரத்தக்கட்டு இருந்துள்ளது.

இதனை அடுத்து விஜய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை செய்ததில் போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சி அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் வினோத் குமார் (வயது 41), கணக்காளர் க்ரூஸ் (வயது 34), பணியாளர் அஜய் (வயது 19) ஆகியோரிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரனான தகவலை அளித்துள்ளனர். 

விசாரணையில், மதுப்பழக்கத்தை விட வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட வாலிபர் விஜய் மீது சிகிச்சை என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலே உயிரிழப்புக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது. போதை மறுவாழ்வு மையத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு சிகிச்சை என்ற பெயரில் அடித்து உதைதிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் வினோத் குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் அஜய் ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில் அங்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எனவே, சென்னையில் இயங்கிவரும் போதை மறுவாழ்வு மையத்தை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com