

ஒரத்தூர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மருத்துவக் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் சோகத்தை கிளப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் நிஷாந்த் (வயது 22). இவர் நாகை அரசு மருத்துவ கல்லூரியில் 2 -ஆம் ஆண்டு அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். நிஷாந்த் செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். மீண்டும் அந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான், 3 -ஆம் ஆண்டு செல்ல முடியும் என்கிற நிலையில் இருந்து வந்தார். மேலும் தேர்வில் தோல்வி அடைந்ததாலும் நிஷாந்த் மன விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு படிப்பதற்காக அங்குள்ள தனி அறைக்கு சென்றார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது பதில் இல்லை.
எனவே சந்தேகம் அடைந்த மாணவர்கள் அவர் இருந்த விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நிஷாந்தை கயிற்றிலிருந்து கீழே இறக்கிய சக மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிஷாந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
செமஸ்டர் தேர்வு தோல்வியால் மனமுடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.