தனது விந்தணுவை நோயாளிக்கு பயன்படுத்திய மருத்துவர்! 40 ஆண்டுகளுக்குப் பிறகு DNA பரிசோதனை.. மருத்துவரே உயிரியல் தந்தை என அதிர்ச்சி!

தங்களது அறிவோ சம்மதமோ இல்லாமல் மருத்துவர் தனது சொந்த விந்தணுவைப் பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
Son Joseph Laedtke with his mother
Son Joseph Laedtke
Published on
Updated on
2 min read

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில், பல தசாப்தங்களாக மறைந்திருந்த அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று DNA பரிசோதனையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தங்களது அனுமதியின்றி மருத்துவர் தனது சொந்த விந்தணுவைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு செய்ததாக குற்றம்சாட்டி, ஒரு பெண்ணும் அவரது மகனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேரி எலன் லுகேசிச் மற்றும் அவரது மகன் ஜோசப் லாட்கே ஹைடர் ஆகியோர் மில்வாக்கி கவுண்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணரான டாக்டர் ஃபிரடெரிக் டெட்மேன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

வழக்கு மனுவின்படி, 1980-ஆம் ஆண்டு குழந்தை பெறுவதில் சிரமம் ஏற்பட்டதால், மேரி எலன் லுகேசிச் மற்றும் அவரது கணவர் மருத்துவ உதவியை நாடினர். அப்போது, பெயர் வெளியிடப்படாத ஒரு மருத்துவ மாணவரின் விந்தணுவைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு செய்யப்படும் என்று மருத்துவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 1982-ல் லுகேசிச் கர்ப்பமானார். பின்னர் 1983-ல் ஜோசப் பிறந்தார்.

எல்லாம் வழக்கம்போல சென்றுகொண்டிருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு மகன் ஜோசப் மேற்கொண்ட DNA பரிசோதனை அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. அந்த பரிசோதனை முடிவுகளில், தனது உயிரியல் தந்தை மருத்துவர் ஃபிரடெரிக் டெட்மேன் என்பதும், இதுவரை தெரியாத பல உறவினர்கள் மற்றும் ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் இருப்பதும் தெரியவந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தாயும் மகனும் அதிர்ச்சியடைந்தனர். தங்களது அறிவோ சம்மதமோ இல்லாமல் மருத்துவர் தனது சொந்த விந்தணுவைப் பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வாழ்க்கை பாதிப்புகளுக்காக இழப்பீடும் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஜோசப் வெளியிட்ட அறிக்கையில், “என் முழு அடையாளமும் ஒரு மருத்துவரின் பொய்யின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்வது மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனால் என்னைவிட என் தாயைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகிறேன். ஒரு தாயாக வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவருக்கு இருந்தது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இதேபோன்ற அனுபவங்களை சந்தித்திருக்கக்கூடிய பிற பெண்களும் முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில், டெட்மேனின் முன்னாள் நோயாளிகள் சிலரும் தங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் தற்போது 91 வயதாகும் டாக்டர் ஃபிரடெரிக் டெட்மேன், இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். அவரது தரப்பு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களை மருத்துவருக்கு நினைவில் இல்லை. மேலும் இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DNA தொழில்நுட்ப வளர்ச்சியால் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட குடும்ப ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரும் நிலையில், அமெரிக்காவில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணையில் உண்மை நிலை என்ன என்பது அடுத்த கட்டத்தில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com