திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு கோபி, ஜோதிராஜ் என்ற இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். நான்கு பேரும் திருமணமாகி அவர்களது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் மனோகரனுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 70 சென்ட் நிலம் இருந்த நிலையில், தனது இரண்டு மகன்களுக்கும் தலா 85 சென்ட் வீதம் சமமாக பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு மனோகரன் உயிரிழந்த நிலையில், தம்பி ஜோதிராஜுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும் தனக்கே தர வேண்டும் என கோபி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஜோதிராஜ் தனது பங்குக்கு கிடைத்த நிலத்தில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனால் இரு சகோதரர்களுக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே வயது மூப்பு காரணமாக பார்வை இழந்த விஜயலட்சுமி ஜோதிராஜ் வீட்டில் தங்கி வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி மது போதையில் ஜோதிராஜின் வீட்டிற்கு வந்த கோபி, அந்த நிலமும் தனக்கே சொந்தம் எனக் கூறி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து. பின்னர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், ஜோதிராஜுடன் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு இருந்த விஜயலட்சுமி சண்டையை தடுக்க முயன்றபோது, அவரை காலால் எட்டி முகத்தில் உதைத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இந்த காட்சி அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாக்குதலில் ஜோதிராஜுக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜோதிராஜ், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். சொத்து தகராறில் பார்வையற்ற தாயைகாலால் எட்டி உதைத்த மகனின் இந்த செயல் அக்கம் பக்கத்தினர் இடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.