“நள்ளிரவில்.. தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை” - மகனின் வெறிச்செயலால் ராணிபேட்டையில் பரபரப்பு!

இதனால் தாய், மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்து
“நள்ளிரவில்.. தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை” - மகனின் வெறிச்செயலால் ராணிபேட்டையில் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி (38). மெக்கானிக்கான இவருக்கு மீனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முனுசாமியின் தாய் தனலட்சுமி (51). முனுசாமி அதே பகுதியில் உள்ள சாலை கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக முனுசாமி தனது கடையைத் திறக்காமல், வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, மகன் வேலைக்குச் செல்லாமல் இருப்பது குறித்து அவரது தாய் தனலட்சுமி அவ்வப்போது கேட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு முனுசாமியின் நடவடிக்கை குறித்து தனலட்சுமி அவரிடம் தட்டிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தாய், மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்து, அதிகாலை வரை நீடித்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முனுசாமி வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தனது தாய் தனலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தனலட்சுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது மருமகள் மீனா, முனுசாமியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, முனுசாமி மீனாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தாய் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து, இருவரையும் மீட்டுள்ளனர்.

பின்னர், அவசர ஊர்தி மூலம் தனலட்சுமி மற்றும் மீனாவை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மீனா காயங்களுடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். தனலட்சுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக மீனாவிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த முனுசாமியை பெருமாள்ராஜபேட்டையில் வைத்து பிடித்தனர்.

தற்போது முனுசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மகனே தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com