நோய்க்கொடுமையால் தாய் தற்கொலை... உயிருடன் வரவழைக்க மகன் செய்த காரியம்...

நோய்க் கொடுமையால் இறந்த தாயை, உயிர்த்தெழ வைப்பதற்காக இளைஞர் ஒருவர் வினோத பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் உயிருடன் வருவார் என காத்திருந்த மகனுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு என்ன?
நோய்க்கொடுமையால் தாய் தற்கொலை... உயிருடன் வரவழைக்க மகன் செய்த காரியம்...

பெரம்பலூர், ரோவர் ஆர்ச் சாலையில் முத்துநகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில் நேரில் சென்ற போலீசார் வீட்டை உடைத்து பார்த்தபோது, அங்கு வயதான பெண்மணியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பார்ப்பதற்கு உயிரிழந்த உடலுக்கு திதி கொடுக்கப்பட்டிருந்தது போல காணப்பட்டது. அதாவது சடலத்தைச் சுற்றி எலுமிச்சைப்பழம், அருகம்புல், ஆப்பிள், ஆரஞ்சு பழங்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. மற்றும் மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி போன்றவை உடல்கள் மீது தூவப்பட்டிருந்தது.

இந்த பயங்கரமான காட்சியைப் பார்த்து திடுக்கிட்டுப் போன போலீசார் மற்றொரு அறைக்குள் சென்று பார்த்தபோது, மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு இளைஞர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

திருவாரூரைப் பூர்வீமாக கொண்ட சர்வானந்தம் என்பவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ராம்குமார் என்ற மகனும், கிரிஜா என்ற மகளும் உண்டு.

பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்த சர்வானந்தம், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆனந்தியின் ஒரே மகளான கிரிஜாவும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்.

பின்னர் ஆனந்தி, தனது மகன் ஸ்ரீராம்குமாருடன் முத்துநகரில் வசித்து வந்தார். 67 வயதான ஆனந்திக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு கால்களிலும் புண் உண்டாகி பெரிதளவில் பாதிப்பு ஏற்பட்டது.

வீட்டை விட்டு வெளியே சென்றால் கால்களில் பிளாஸ்டிக் பையை மாட்டிக் கொண்டுதான் செல்வது வழக்கம். திருச்சியில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் டிசைனராக வேலை பார்த்து வந்த ஸ்ரீராம், சமீபத்தில் பெரம்பலூருக்கே வந்தார்.

இந்நிலையில் நோயின் பாதிப்பு முற்றியதால் ஆனந்தி கடந்த 24-ம் தேதியன்று வீட்டில் எறும்பு பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பாக மகன் ஸ்ரீராமுக்கு, ஆனந்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் தனக்காக சமைப்பது, துவைப்பது என எல்லா வேலைகளையும் பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டவர், இறந்து போன மகள் கிரிஜா, மம்மி மம்மி என தன்னை அழைப்பது போல தோன்றுவதாகவும், அவளுடனேயே செல்வதாகவும் கூறியிருந்தார். மேலும் தான் இறந்த பிறகு உடலை எரிக்காமல், புதைத்து விடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த கடிதத்தைப் பார்த்த ஸ்ரீராம், திடீரென ஒரு விபரீத முடிவுக்கு வந்தார். சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தியில் ஊறிய ஸ்ரீராம், தனது தாயாரை உயிர்த்தெழ வைப்பதற்காக வினோத பூஜையில் ஈடுபட்டார்.

அதன்படி தாயின் உடலைச் சுற்றி பூஜை பொருட்களை வைத்து சில மணி நேரம் பூஜைகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் தனது தாய் உயிர்த்தெழாததால் விரக்தியடைந்த ஸ்ரீராம், வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 25-ம் தேதியே நடந்த இந்த சம்பவம் குறித்து வெளியே யாருக்கும் தெரியாத நிலையில், ஒரு வாரத்துக்கும் மேலாக இருவரது உடல்களும் உள்ளேயே கிடந்து அழுகிப் போயின.

சம்பவம் அறிந்து நேரில் சென்ற போலீசார் உடல்களை மீட்க முயன்றனர். ஆனால் ஆனந்தியின் உடல் தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டதால் மருத்துவர்களை வீட்டுக்கே வரவழைத்து சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.

பின்னர் இருவரது உடல்களும் ஆத்தூர் சாலையில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டன. கணவர் மற்றும் மகள் இறந்த விரக்தியில் 67 வயது பெண்மணி தற்கொலை செய்து கொள்ள, தாயின் முடிவைக் கண்டு மகனும் உயிரை விட்டது என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இறந்து போன இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com