சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை நடந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 36 வயது நபரைக் கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை தனது பெற்றோருடன் வசித்து வருகிறது. கடந்த (அக்டோபர் 17) ஆம் தேதி, வீட்டிற்கு வெளியே விளையாடிவிட்டு இரவு வீடு திரும்பிய குழந்தை அழுதுகொண்டே வந்துள்ளது. குழந்தை கீழே விழுந்ததால் அழுவதாக நினைத்த பெற்றோர், அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மறுநாள் குழந்தையின் தொடைப் பகுதியில் வீக்கம் இருப்பதைப் பார்த்த பெற்றோர், (அக்டோபர் 19) ஆம் தேதி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மருந்துகளை வழங்கி அனுப்பியுள்ளனர்.
ஆனால், வீக்கம் குறையாததால் மீண்டும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அதைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, (அக்டோபர் 23) ஆம் தேதி குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், பிறப்புறுப்பு பகுதியில் ரத்தம் கண்ணிப்போய் இருப்பதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ரஞ்சித் என்பவர் குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், ரஞ்சித் மீனவர் என்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து வீட்டைக் காலி செய்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்குக் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குடும்பப் பிரச்சினை காரணமாக ரஞ்சித்தின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு அவரைப் பிரிந்து சென்றதாகவும், இதையடுத்து தனியாக வசித்து வந்த ரஞ்சித், கடந்த மாதம் தனது சகோதரரைப் பார்ப்பதற்காக எண்ணூர் பகுதிக்கு வந்து அங்கேயே தங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது, சகோதரர் வீட்டிற்கு வந்து செல்லும் இரண்டரை வயது குழந்தையிடம் அன்பாகப் பேசி, டீ கொடுத்து நெருக்கத்தை ஏற்படுத்தி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ரஞ்சித் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஞ்சித்தைக் கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எண்ணூரில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்