7 வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொந்தரவு? ஈரோட்டில் அதிர்ச்சி.. போக்சோவில் கைது செய்யப்பட்ட பொற்கொல்லர்!

பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது...
7 வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொந்தரவு? ஈரோட்டில் அதிர்ச்சி.. போக்சோவில் கைது செய்யப்பட்ட பொற்கொல்லர்!
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 7 வயது சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி தொடர்பாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் அடிப்படையில், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணை

இந்தப் புகாரின் பேரில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் தந்தையான அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சுப்பிரமணியம் என்பவர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் பொற்கொல்லர் பட்டறையில் வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Admin

போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து, சுப்பிரமணியத்தை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுப்பிரமணியத்தை நீதிபதியின் உத்தரவின்பேரில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7 வயது சிறுமி தொடர்பான இந்தப் புகார் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணையின் முடிவுகள் போலீசாரின் தொடர் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com