

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் பகுதியில் வசித்து வருபவர் செங்குட்டுவன். இவர் தன்னுடைய விளை நிலத்தில் இன்று காலை மாடு மேய்க்க சென்ற போது ஒரே இடத்தில் அதிகமாக கற்கள் கொட்டபட்டதை பார்த்து சந்தேகம் அடைந்து ஆசனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் காவல்துறையினர் அப்பகுதியை தோண்டிப் பார்த்த பொழுது சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் முகம் சிதைந்து உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உயிரிழந்த நபர் செல்வம் என்பதும் இவர் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காடகநல்லி பகுதியில் இருந்து கர்மானம் வந்து பொம்மன் என்பவருடன் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பொம்மன் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கர்நாடக மாநிலம் உடையார்பாளையம் பகுதிக்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்த போது இவர்களுக்கு ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் இரவு கீழ்மனம் பகுதியில் உள்ள பொம்மன் தோட்டத்திற்கு வந்த செல்வம் சதிஷ், ரமேஷ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி தகராறாக முற்றியுள்ளது. அப்பொழுது ரமேஷ் தனது அருகே இருந்த கட்டையை எடுத்து செல்வத்தின் தலை மற்றும் கைகளில் தாக்கியுள்ளார். மேலும் சதீஷ் செல்வம் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதில் செல்வம் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் சதீஷ் ஆகியோர் “செல்வத்தின் மீது கல்லை போட்டு கொலை செய்து விட்டோம்” என பொம்மனிடம் தெரிவித்துவிட்டு அங்கேயே பிரேதத்தை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த பொம்மன் தன்னுடைய மச்சான் மாதேவனை அழைத்து நடந்த விஷயத்தை கூறியுள்ளதாகவும் பொம்மன் மற்றும் மாதேவன் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்ட செல்வத்தின் பிணத்தை தோட்டத்தில் புதைத்ததாகவும் ஆசனூர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தனர். அதனை தொடர்ந்து ஆசனூர் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் புஞ்சை புளியம்பட்டியில் பதுங்கி இருந்த ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.